இந்திய விருந்தோம்பல் துறையின் முன்னோடி, ஓபராய் குழுமத்தின் தலைவர் பிஆர்எஸ் ஓபராய் காலமானார்
இந்திய ஹோட்டல் துறையின் முன்னோடியும், ஓபராய் குழுமத்தின் தலைவருமான பிருத்வி ராஜ் சிங் ஓபராய், இன்று காலை வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 94. "ஆழ்ந்த வருத்தத்துடனும், துக்கத்துடனும் எங்கள் அன்புத் தலைவர் திரு. பி.ஆர்.எஸ். ஓபராய் இன்று இயற்கை எய்தினார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்." "அவரது மறைவு ஓபராய் குழுமத்திற்கும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள விருந்தோம்பல் துறைக்கு குறிப்பிடத்தக்க இழப்பாகும்" என அவரின் மகன்களான விக்ரம் மற்றும் அர்ஜுன் ஓபராய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர். அவரது இறுதிச் சடங்கு டெல்லியின் கபஷேரா பகுதியில் ஓபராய் தோட்டத்தில், இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
யார் இந்த பிஆர்எஸ் ஓப்பராய்?
புதுடெல்லியில் கடந்த 1939 ஆம் ஆண்டு பிறந்த பிஆர்எஸ் ஓபராய், ஓபராய் குழுமத்தின் முதன்மை நிறுவனமான EIH லிமிடெட்டின் செயல் தலைவராக இருந்தார். இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஸ்விட்சர்லாந்து நாடுகளில் கல்வி பயின்ற பிஆர்எஸ் ஓபராய், பல நாடுகளில் ஆடம்பர ஹோட்டல்களை நிர்வகிப்பதற்கான வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். ஓபராய் குழுமத்தின் ஹோட்டல்கள், ரிசார்டுகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில், பிஆர்எஸ் ஓபராய் முக்கிய பங்காற்றியுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு, நாட்டுக்கான இவரின் சேவையை பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டு கேன்ஸில் நடந்த இன்டர்நேஷனல் லக்சுரி டிராவல் மார்க்கெட்(ILTM) விழாவில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.