மகளிருக்கு மாதம் ரூ.7,000 உதவித் தொகையுடன் எல்ஐசியில் புதிய திட்டம் அறிமுகம்; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
வேலை வாய்ப்புகள் மற்றும் நிதி சுதந்திரத்தை வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட பீமா சகி யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கட் கிழமை (டிசம்பர் 9) ஹரியானாவின் பானிபட்டில் வெளியிட்டார். லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) மூலம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பெண்களை காப்பீட்டு முகவர்களாக (பீமா சகி) ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியதுடன், இந்தத் திட்டத்தை இந்த திசையில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக எடுத்துரைத்தார். இத்திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு முடித்த, 18-70 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
மூன்று ஆண்டுகள் பயிற்சித் திட்டம்
விண்ணப்பதாரர்கள் நிதியியல் கல்வியறிவு மற்றும் காப்பீட்டு அறிவை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மூன்று ஆண்டு பயிற்சித் திட்டத்தில் பங்கேற்பார்கள். பயிற்சியின் போது, பங்கேற்பாளர்கள் முதல் ஆண்டில் மாதந்தோறும் ₹7,000, இரண்டாம் ஆண்டில் ₹6,000 மற்றும் மூன்றாம் ஆண்டில் ₹5,000 என மூன்று ஆண்டுகளில் ₹2 லட்சம் வரை உதவித்தொகை பெறுவார்கள். பயிற்சிக்குப் பின், அவர்கள் எல்ஐசி முகவர்களாகச் செயல்படுவார்கள். ஆனால் வழக்கமான ஊழியர் பலன்களைப் பெற மாட்டார்கள். திட்டத்தில் தொடர்ந்து இருக்க பங்கேற்பாளர்கள் வருடாந்திர பர்பார்மன்ஸ் டார்கெட்களை முடிக்க வேண்டும். எல்ஐசி இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்த முன்முயற்சி பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், பின்தங்கிய சமூகங்களில் காப்பீட்டின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.