Page Loader
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000; 18வது தவணை பிஎம் கிசான் சம்மன் நிதி அக்டோபர் 5ஆம் தேதி வெளியீடு
18வது தவணை பிஎம் கிசான் சம்மன் நிதி அக்டோபர் 5ஆம் தேதி வெளியீடு

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000; 18வது தவணை பிஎம் கிசான் சம்மன் நிதி அக்டோபர் 5ஆம் தேதி வெளியீடு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 26, 2024
01:25 pm

செய்தி முன்னோட்டம்

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) திட்டத்தின் 18வது தவணைக்காக பயனாளிகள் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 5ஆம் தேதி தொகையை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, 17வது தவணையை பிரதமர் மோடி இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டார். பிரதமர் கிசான் திட்டத்தின் 17வது தவணை ரூ.21,000 கோடி மதிப்பிலான 9.26 கோடி விவசாயிகளுக்கு ஜூன் 18, 2024 அன்று உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தனது பயணத்தின் போது வழங்கினார். 16வது தவணையை இந்த ஆண்டு பிப்ரவரியில் மோடி வெளியிட்டார். இந்த திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2,000 என ஆண்டுதோறும் மொத்தமாக ரூ.6,000 வழங்கப்படுகிறது.

திட்டம்

பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டம்

இந்த திட்டம் 2019 இடைக்கால பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர் பியூஷ் கோயலால் அறிவிக்கப்பட்டு, பின்னர் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இது இப்போது உலகின் மிகப்பெரிய நேரடி பலன் பரிமாற்ற திட்டமாக மாறியுள்ளது. இந்த தவணைகளைப் பெற, விவசாயிகள் தங்கள் இ-கேஒய்சியை முடிக்க வேண்டும். திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இ-கேஒய்சி கட்டாயமாகும். ஓடிபி அடிப்படையிலான இ-கேஒய்சியை பிஎம் கிசான் வலைதளத்தின் மூலம் மேற்கொள்ளலாம் அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான இ-கேஒய்சிக்கு அருகிலுள்ள பொது சேவை மையங்களைத் தொடர்புகொள்ளலாம்.