90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் பிட்சா ஹட் நிறுவனம் $2.7 பில்லியனுக்கு விற்பனை
செய்தி முன்னோட்டம்
90ஸ் கிட்ஸ்களுக்கு, Pizza Hut என்பது வெறும் உணவகம் மட்டுமல்ல; அது ஒரு உணர்வுப்பூர்வமான இடமாகும். சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான இந்தத் துரித உணவுச் சங்கிலித் தொடர் நிறுவனம், தற்போது ஒரு புதிய நிர்வாகத்தின் கீழ் தனது அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கவுள்ளது. பிட்சா ஹட், கேஎப்சி மற்றும் டகோ பெல் ஆகிய முன்னணி பிராண்டுகளின் தாய் நிறுவனமான 'யம் பிராண்ட்ஸ்', பிட்சா ஹட் நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக 2.7 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்யச் சம்மதித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி பிட்சா ஹட்டின் சீன வர்த்தகத்தை 'யம் சீனா ஹோல்டிங்ஸ்' நிறுவனம் 1.2 பில்லியன் டாலருக்கும், மீதமுள்ள சர்வதேச வர்த்தகத்தை 'லாங்ரேஞ்ச் கேபிட்டல்' நிறுவனம் 1.5 பில்லியன் டாலருக்கும் வாங்குகின்றன.
பின்னணி
விற்பனைக்கான பின்னணிக் காரணங்களும் மாறும் நுகர்வோர் பழக்கமும்
சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டி, உலகளாவிய பணவீக்கம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் பிட்சா ஹட் நிறுவனம் கடந்த சில காலாண்டுகளாக தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்தது. மேலும், தற்காலத்தில் மக்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களுக்கு மாறி வருவதும், உடல் எடையைக் குறைக்கும் மருந்துகளின் (GLP-1) பயன்பாடு அதிகரித்துள்ளதும் பிட்சா விற்பனை சரிவடைவதற்குக் கூடுதல் காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
வியாபாரம்
கேஎப்சி மற்றும் டகோ பெல் மீது கவனம் செலுத்தும் 'யம் பிராண்ட்ஸ்'
இந்த மாபெரும் வணிக விற்பனைக்குப் பிறகு, யம் பிராண்ட்ஸ் நிறுவனம் தங்களுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தரும் கேஎப்சி மற்றும் டகோ பெல் ஆகிய பிராண்டுகளின் வளர்ச்சியில் மட்டும் முழுமையாகக் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அதிகாரப்பூர்வமாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், புதிய உரிமையாளர்களின் கீழ் பிட்சா ஹட் நிறுவனம் தனது பழைய பெரு மீட்டெடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.