வாரத்தில் 2-வது முறை! மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் காரணமாக சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோகத் தட்டுப்பாட்டால், இந்தியாவில் ஒரே வாரத்திற்குள் இரண்டாவது முறையாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தொடர் விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 86 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 83 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. பெட்ரோல்: கடந்த வாரம் ரூ. 97.77 ஆக இருந்த பெட்ரோல் விலை தற்போது ரூ. 98.64 ஆக அதிகரித்துள்ளது. டீசல்: ரூ. 90.67 ஆக இருந்த டீசல் விலை தற்போது ரூ. 91.58 ஆக உயர்ந்துள்ளது.
முடக்கம்
ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கம்
கடந்த மே 15 (வெள்ளிக்கிழமை) அன்றுதான் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டது. அந்தச் சுவடு மறைவதற்குள் தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க -ஈரான் போரே இந்த எரிசக்தி நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாகும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை முடக்கியது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவும் அங்கு கடற்படை முற்றுகையை ஏற்படுத்தியதால் கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) வர்த்தகத்தில் 20 சதவீத பங்கைக் கொண்டுள்ள இந்த வழித்தடம் முடங்கியதால், சர்வதேச எண்ணெய் விலை 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
நெருக்கடி
தொடரும் பொருளாதார நெருக்கடி
கடந்த 2022 ஏப்ரல் முதல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான IOC, BPCL மற்றும் HPCL ஆகியவை தினசரி விலை மாற்றத்தை நிறுத்தி வைத்திருந்தன. உக்ரைன் போரின் போது ஏற்பட்ட நஷ்டத்தை அடுத்தடுத்த மாதங்களில் ஈடு செய்த நிறுவனங்கள், தற்போது மேற்கு ஆசியப் போரினால் ஏற்பட்டுள்ள கடுமையான நஷ்டத்தைத் தவிர்க்கவே இந்த அடுத்தடுத்த விலை உயர்வை அமல்படுத்தி வருகின்றன. சர்வதேச அளவில் போர் பதற்றம் தணியாத வரை, வரும் நாட்களிலும் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.