செயற்கை நுண்ணறிவால் பேடிஎம் நிறுவனத்தில் 100 ஊழியர்கள் வேலை இழப்பு
பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன், தனது செயல்பாட்டில் ஆட்டோமேஷனைக் கொண்டு வருவதற்கும் செலவுக் குறைப்பை உறுதி செய்வதற்கும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இதையடுத்து, நிறுவனத்தின் விற்பனை மற்றும் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றிய 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டின் மூலம் செலவுகளைக் குறைத்தல், செயல்பாட்டின் மேம்பட்ட செயல்திறன் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்களில் திரும்பத் திரும்ப செய்யப்படும் பணிகளை அகற்றியதன் மூலம் ஊழியர்களுக்கான தேவையைக் குறைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதன் மூலம், 10 சதவீத ஊழியர் செலவை குரைத்துளளதாக தெரிவித்துள்ள பேடிஎம், இது வாடிக்கைகையாளர்களுக்கு இன்னும் சிறப்பாக சேவை செய்ய உதவும் என தெரிவித்துள்ளது.
பேடிஎம் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நிகழ்வுகள்
கடைசியாக, 2021ஆம் ஆண்டில், பேடிஎம் 500-700 ஊழியர்களை அவர்களின் செயல்திறன் அடிப்படையில் பணிநீக்கம் செய்தது. இந்த ஆண்டு டிசம்பரில், நிறுவனம் தனது குறு கடன் வியாபாரத்தை குறைப்பதையும், அதிக தனிநபர் மற்றும் வணிகக் கடன்களை விரிவாக்குவதிலும் கவனம் செலுத்த தொடங்கியது. ஆனால், இந்த திட்டம் எதிர்பார்த்த முடிவுகளைத் தரவில்லை. இது ஒட்டுமொத்தமாக நிறுவனத்திற்கு வருவாய் இழப்பையும் கொடுத்துள்ளது. இதனால், ஒருபுறம் ஆட்குறைப்பில் ஈடுபட்டாலும், நிறுவனம் தனது நெட்வொர்க்கில் அதிக வணிகர்களைப் பெற 15,000 க்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.