LOADING...
ஜனவரி 1 முதல் மாறவுள்ள புதிய நிதி விதிகள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
ஜனவரி 1 முதல் பல முக்கிய நிதி மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன

ஜனவரி 1 முதல் மாறவுள்ள புதிய நிதி விதிகள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

எழுதியவர் Venkatalakshmi V
Dec 31, 2025
06:50 pm

செய்தி முன்னோட்டம்

2026-ம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், ஜனவரி 1 முதல் வரி செலுத்துவோர், வங்கி வாடிக்கையாளர்கள், கடன் வாங்குபவர்கள் மற்றும் சம்பளம் பெறுவோர் ஆகியோரை நேரடியாகப் பாதிக்கும் வகையில் பல முக்கிய நிதி மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. வருமான வரி தாக்கல் விதிகள், பான்-ஆதார் இணைப்பு தொடர்பான விதிமுறைகள் மற்றும் கிரெடிட் ஸ்கோர் (CIBIL) புதுப்பித்தல் நடைமுறைகள் எனப் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய மாற்றங்கள் உங்கள் நிதி நிர்வாகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியமாகும்.

மாற்றம் 1

8-வது ஊதியக் குழு (8th Pay Commission)

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது ஒரு மிக முக்கியமான ஆண்டாகும். 7-வது ஊதியக் குழுவின் 10 ஆண்டு காலம் 2025 டிசம்பர் 31-டன் முடிவடைகிறது. 2026 ஜனவரி 1 முதல் 8-வது ஊதியக் குழு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அடிப்படைச் சம்பளம், அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றில் கணிசமான உயர்வு இருக்கும். ஃபிட்மென்ட் காரணி (Fitment Factor) மாற்றப்படுவதால், ஊழியர்களின் சம்பளம் 20% முதல் 35% வரை உயர வாய்ப்புள்ளது.

மாற்றம் 2

பான் - ஆதார் இணைப்பு

பான் கார்டையும், ஆதார் எண்ணையும் இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிசம்பர் 31, 2025) முடிகிறது. இன்று நள்ளிரவுக்குள் இணைக்காவிட்டால், நாளை முதல் உங்கள் பான் கார்டு 'செயலற்றது' (Inoperative) என அறிவிக்கப்படும். முடக்கப்பட்ட பான் கார்டு மூலம் வங்கி கணக்கு தொடங்குதல், பரஸ்பர நிதி (Mutual Funds) முதலீடு மற்றும் ரூ. 50,000-க்கு மேலான பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது. நாளை முதல் இணைக்க விரும்புபவர்கள் ரூ. 1,000 அபராதம் செலுத்தியே மீண்டும் செயல்படுத்த முடியும்

Advertisement

மாற்றம் 3

வருமான வரி (ITR) திருத்தங்களுக்கான கடைசி வாய்ப்பு

2024-25 நிதியாண்டிற்கான (AY 2025-26) திருத்தப்பட்ட (Revised) அல்லது காலந்தாழ்ந்த (Belated) வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள். நாளை முதல் உங்களால் சாதாரண முறையில் திருத்தப்பட்ட ஐடிஆர் தாக்கல் செய்ய முடியாது. அதற்குப் பிறகு 'Updated Return' (ITR-U) மட்டுமே தாக்கல் செய்ய முடியும், இதற்கு கூடுதல் வரி அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

Advertisement

மாற்றம் 4

வாராந்திர கிரெடிட் ஸ்கோர் புதுப்பிப்பு

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உங்கள் கடன் திருப்பி செலுத்தும் விவரங்களை (Credit Bureau reporting) இனி 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக, வாரம் ஒருமுறை புதுப்பிக்கும். நீங்கள் கடனைச் சரியாகச் செலுத்தினால் உங்கள் சிபில் (CIBIL) ஸ்கோர் மிக விரைவாக உயரும். இதன் மூலம் புதிய கடன்களைப் பெறுவது எளிதாகும்.

எரிவாயு

எரிவாயு மற்றும் எரிபொருள் விலை மாற்றம்

ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியை போலவே, ஜனவரி 1-ம் தேதியும் சமையல் எரிவாயு (LPG) மற்றும் வணிக ரீதியான சிலிண்டர்களின் விலையில் மாற்றங்கள் இருக்கும். சர்வதேச சந்தை நிலவரப்படி விலை குறைப்பு அல்லது உயர்வு அறிவிக்கப்படலாம். இது தவிர ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய வழிகாட்டுதலின்படி, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக எந்தப் பரிவர்த்தனையும் செய்யப்படாத (Dormant/Inactive) மற்றும் பூஜ்ஜிய இருப்பு (Zero Balance) கொண்ட கணக்குகளை வங்கிகள் மூட வாய்ப்புள்ளது. உங்கள் கணக்கு செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய ஒரு சிறிய பரிவர்த்தனை செய்வது நல்லது.

Advertisement