Loading...
மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளின் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு NPCI கொண்டுவரும் புதிய கட்டண விதி
'யுபிஐ மற்றும் சேவைகள் வழிகாட்டுதல் குழு' இந்தப் புதிய கட்டண முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது

மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளின் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு NPCI கொண்டுவரும் புதிய கட்டண விதி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 19, 2026
12:36 pm

செய்தி முன்னோட்டம்

யுபிஐ மூலம் நடைபெறும் வணிகத்திற்கு இடையிலான பணப் பரிவர்த்தனைகளுக்கு, பரிவர்த்தனைத் தொகை எவ்வளவாக இருந்தாலும் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 நிலையான கட்டணம் வசூலிக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. CNBC-TV18 வெளியிட்டுள்ள செய்தியின்படி, NPCI-யின் 'யுபிஐ மற்றும் சேவைகள் வழிகாட்டுதல் குழு' இந்தப் புதிய கட்டண முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் இடையிலான பணப் பரிவர்த்தனைகள் மற்றும் B2B சந்தைத் தளங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் வணிகக் கட்டணங்களுக்கு இது பொருந்தும்.

நிலையான கட்டணம்

சதவீத கட்டணத்தை விட ரூ.5 நிலையான கட்டணம் வணிகர்களுக்கு எப்படி லாபம்?

வழக்கமான வணிக பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் சதவீத அடிப்படையிலான கட்டணத்தை விட, இந்த ரூ.5 நிலையான கட்டணம் வியாபாரிகளுக்கு பெரிய அளவில் செலவைக் குறைக்கும்.

உதாரணமாக, ₹20,000 மதிப்புள்ள ஒரு பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம் விதிக்கப்பட்டால் ₹80 கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

இதேபோல் ₹40,000 பரிவர்த்தனைக்கு ₹160 செலவாகும். ஆனால் புதிய B2B கட்டண முறையின் கீழ், பரிவர்த்தனைத் தொகை எவ்வளவாக இருந்தாலும் வெறும் ₹5 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்.

பெரிய தொகைகளுக்கான பரிவர்த்தனைகளில் அதிகபட்சமாக ₹300 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என வியாபாரிகள் அஞ்சிய நிலையில், ₹5 கட்டணம் மூலம் ஒரு பரிவர்த்தனைக்கு ₹295 வரை வியாபாரிகளுக்கு நேரடியாக மிச்சமாகும்.

MDR கட்டண விதி

MDR கட்டண விதிகளும் வியாபாரிகளின் கோரிக்கையும்

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதற்காக வியாபாரிகளிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணமே மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட் எனப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் NPCI அறிவித்த திருத்தப்பட்ட கட்டமைப்பில், வாடிக்கையாளர்களிடமிருந்து வணிகர்களுக்குச் செல்லும் (P2M) ₹2,000-க்கு மேற்பட்ட தகுதியான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR கட்டணமும் (₹75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சம் ₹300 உச்சவரம்பு) அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், வணிகர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளுக்குத் தனி கட்டணம் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இதற்கிடையில், சில்லறை வியாபாரிகளிடமிருந்து விநியோகஸ்தர்களுக்கு செல்லும் 40-45% கடன் பில் செட்டில்மெண்ட்கள் யுபிஐ மூலமே நடைபெறுவதால், வணிகர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளை MDR கட்டண வரம்பிலிருந்து முழுமையாக விலக்க வேண்டும் என AICPDF மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT