2,350 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது நோக்கியா நிறுவனம்
தொலைத்தொடர்பு நிறுவனமான நோக்கியா, அதன் தற்போதைய செலவுக் குறைப்பு உத்தியின் ஒரு பகுதியாக, உலகம் முழுவதும் 2,350 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது. இதில் ஐரோப்பா மற்றும் சீனாவைச் சேர்ந்த பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நகர்வுகள் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நோக்கியாவின் பணியாளர் குறைப்புத் திட்டம் 2026இன் ஒரு பகுதியாகும். இதன்படி, 2026க்குள் அதன் உலகளாவிய பணியாளர்களை சுமார் 86,000இலிருந்து 72,000-77,000 ஊழியர்களாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நோக்கியாவின் ஆட்குறைப்பு நடவடிக்கை ஒரு பரந்த செலவுக் குறைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது 2026க்குள் €800 மில்லியன் முதல் €1.2 பில்லியன் வரை சேமிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
லாபம் உயர்ந்தாலும் பங்குகள் வீழ்ச்சி
இந்த செலவுக் குறைப்புகளால் அதன் மூன்றாம் காலாண்டு செயல்பாட்டு லாபம் 9% உயர்ந்தாலும், நிறுவனத்தின் நிகர விற்பனை எதிர்பார்ப்புகளைத் தவறவிட்டதால், அதன் பங்கு மதிப்பில் 4% வீழ்ச்சி ஏற்பட்டது. இருப்பினும், இந்த உத்தியின் மூலம் நோக்கியா ஏற்கனவே 500 மில்லியன் யூரோக்கள் மொத்த சேமிப்பை அடைந்துள்ளது. நோக்கியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பெக்கா லண்ட்மார்க், நிறுவனத்தின் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை பாதிக்காது என்று உறுதியளித்துள்ளார். தற்போதைய ஆட்க்குறைப்பு வேகத்தில் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய அவர், நோக்கியா திட்டமிட்ட கால அட்டவணையை விட சற்று முன்னோக்கிச் செல்வதாகக் கூறினார். தற்போது, நோக்கியாவில் உலகளவில் 78,500 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.