
MPL நிறுவனத்தில் 60% ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசின் புதிய சட்டத்தால் ஏற்பட்ட முதல் பெரிய விளைவாக, ஆன்லைன் கேமிங் தளமான மொபைல் பிரீமியர் லீக் (MPL) இந்தியாவில் உள்ள தனது ஊழியர்களில் சுமார் 60% பேரை, அதாவது கிட்டத்தட்ட 300 பேரை, பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இளைஞர்களிடையே அதிகரித்து வரும் நிதி மற்றும் போதை அபாயங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கட்டண ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் உள் வட்டாரத் தகவல்படி, சந்தைப்படுத்துதல், நிதி, மற்றும் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த பணி நீக்கங்கள் இருக்கும். MPL நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாய் ஸ்ரீனிவாஸ், ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்த முக்கிய முடிவை உறுதிப்படுத்தினார்.
வருவாய் இழப்பு
50 சதவீத வருவாய் இழப்பு
இந்தியாவில் இருந்து கிடைக்கும் வருவாய் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 50% ஆக இருந்ததாகவும், புதிய சட்டத்தால் அந்த வருவாய் இனி இருக்காது என்றும் அவர் விளக்கினார். இதன் காரணமாக, நிறுவனம் இனி இலவசமாக விளையாடக்கூடிய விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதோடு, அமெரிக்கச் சந்தையில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2025 நிறைவேற்றப்பட்டதால், பல கட்டண ஃபேண்டஸி கிரிக்கெட், ரம்மி, மற்றும் போக்கர் விளையாட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளன. 2029 ஆம் ஆண்டுக்குள் $3.6 பில்லியன் மதிப்புடையதாக வளரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தத் துறைக்கு இந்தச் சட்டம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதேபோல், MPL இன் போட்டியாளரான *ட்ரீம்11 நிறுவனமும் தனது கட்டணப் போட்டிகளை நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.