பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது கர்நாடக அரசு
மாநில அரசு அமல்படுத்திய பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வைத் தொடர்ந்து கர்நாடகாவில் எரிபொருள் விலை லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் உயர்ந்துள்ளது. கர்நாடகா விற்பனை வரி(KST) பெட்ரோலுக்கு 25.92% லிருந்து 29.84% ஆகவும், டீசலுக்கு 14.3% லிருந்து 18.4% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக மாநில அரசு இன்று அறிவித்தது . இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே ரூ.3 மற்றும் ரூ.3.02 உயர்ந்துள்ளதாக அகில கர்நாடக பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெங்களூருவில், பெட்ரோல் விலை இப்போது லிட்டருக்கு ₹102.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ₹88.94 ஆகவும் உள்ளது.
மாநில அரசின் உத்தரவாதத்திற்கு நிதியளிக்க எரிபொருள் விலை உயர்வு
விலை மாற்றம் குறித்து பேசிய அகில கர்நாடக பெட்ரோலியம் வர்த்தகர்களின் கூட்டமைப்பு தலைவர் கே.எம்.பசவேகவுடா, "இன்று பிற்பகலில் எங்களுக்கு இதற்கான அறிவிப்பு வந்தது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 5,000 டீலர்கள் திருத்தப்பட்ட எரிபொருள் விலையின் அடிப்படையில் விலைகளை டிஜிட்டல் டிஸ்ப்ளேயில் மாற்றியுள்ளனர்." என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு, நவம்பர் 2021 இல் எரிபொருள் விலையை பாஜகவின் மாநில அரசாங்கம் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட்-19க்குப் பிந்தைய பொருளாதாரத்தை புதுப்பிக்க பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. காங்கிரஸ் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஐந்து உத்தரவாதங்களுக்கு நிதியளிக்க இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.