LOADING...
இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ! ஜியோ பங்குகளை விற்கத் தயாராகும் முகேஷ் அம்பானி! அடுத்த தலைமுறை வாரிசுகள் கையில் புதிய பொறுப்பு
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மெகா ஐபிஓ

இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ! ஜியோ பங்குகளை விற்கத் தயாராகும் முகேஷ் அம்பானி! அடுத்த தலைமுறை வாரிசுகள் கையில் புதிய பொறுப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jun 19, 2026
08:03 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய மூலதனச் சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய திருப்புமுனையாக அமையவிருக்கும் ஒரு மெகா அறிவிப்பை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டிற்கான (ஐபிஓ) வரைவு ஆவணங்களை (DRHP) இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) இன்று தாக்கல் செய்ய ஜியோ வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 49வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இத்தகவலை அதன் தலைவர் முகேஷ் அம்பானி அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.

வாரிசுகள்

அடுத்த தலைமுறை வாரிசுகள் கையில் ஐபிஓ பொறுப்பு

இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, தமக்கு இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம் என்று குறிப்பிட்டார். நிறுவனர் திருபாய் அம்பானியின் பொதுவான வளர்ச்சி என்ற பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்துச் சென்றது போல, தனது வாரிசுகளான ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் இந்த ஜியோ ஐபிஓ செயல்முறைகளை முன்னின்று வழிநடத்துகிறார்கள் என்று அறிவித்தார். இந்த முன்மொழியப்பட்ட ஜியோ நிறுவனத்தின் பட்டியலிடல், உலகளாவிய அளவில் இந்தியாவால் மிக உயர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபிக்கும் என்று அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார்.

பங்குகள்

ஜியோவின் பிரம்மாண்ட சந்தை மதிப்பு மற்றும் பங்குகளின் விபரம்

ரிலையன்ஸ் நிறுவனம் சமர்ப்பித்துள்ள ஒழுங்குமுறை ஆவணங்களின்படி, இந்த ஐபிஓ வெளியீட்டில் தலா 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட 27 கோடி புதிய சாதாரண பங்குகள் வெளியிடப்படவுள்ளன. புக்கீப்பிங் (Book-building) செயல்முறை மூலம் இதற்கான இறுதிப் பங்கு விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது. சர்வதேச முதலீட்டு வங்கியான ஜெஃப்ரிஸ் கணிப்பின்படி, ஜியோவின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 180 பில்லியன் டாலர்களாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சம் கோடி) உள்ளது. இதன் ஐபிஓ மதிப்பு மட்டும் 4 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்பதால், இது இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவாகக் கருதப்படுகிறது.

Advertisement

வாடிக்கையாளர்கள்

52 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் இருக்கும் ஜியோ

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நிலவி வந்த டிஜிட்டல் சமத்துவமின்மையை நீக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட ஜியோ, தற்போது 52.4 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் தளமாக உருவெடுத்துள்ளது. இதில் ஜியோ 5ஜி சேவையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 26.8 கோடியாக உயர்ந்துள்ளதுடன், ஜியோ ஏர்ஃபைபர் மூலம் 1.3 கோடி வீடுகள் இணைக்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியான ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் 2.95 பில்லியன் டாலர் ஐபிஓ சாதனையை இந்த ஜியோ ஐபிஓ முறியடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

எதிர்கால இலக்குகள்

நிறுவனத்தின் ஐந்து முக்கிய எதிர்கால இலக்குகள்

ஜியோவின் அடுத்தகட்ட வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல ஐந்து முக்கிய உத்திகளை முகேஷ் அம்பானி பட்டியலிட்டுள்ளார். 2030ஆம் ஆண்டிற்குள் ஜியோவின் அனைத்து வாடிக்கையாளர்களையும் முழுமையாக 5ஜி சேவைக்கு மாற்றுவது மற்றும் 6ஜி தரநிலைகளில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பது இதன் முதல் இலக்காகும். மேலும், ஜியோ ஏர்ஃபைபர் சேவையை நாடு முழுவதும் அதிவேகமாக விரிவுபடுத்துவது, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களை நிறுவனத்தின் அனைத்துச் சேவைகளிலும் புகுத்துவது மற்றும் ஜியோவின் சொந்த 5ஜி மற்றும் ஏஐ தொழில்நுட்பக் கட்டமைப்பை சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஆகிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Advertisement