இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி.. ஒரு லட்சம் இந்தியர்களை பணியமர்த்தத் திட்டமிடும் இஸ்ரேல்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிடையே கடந்த ஒரு மாத காலமாக போர் நடைபெற்றும் நிலையில், இஸ்ரேல் எடுத்த முக்கிய முடிவு ஒன்று இந்திய பொருளாதாராத்திற்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இஸ்ரேலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 90,000 பேர் வரை வேலை பார்த்து வருகிறார்கள். ஹமாஸ் அமைப்புடன் போர் நடைபெற்று வருவதையடுத்து அவர்களின் வேலை அனுமதிகளை திரும்பப் பெற்றிருக்கிறது இஸ்ரேல். இதனால், இஸ்ரேலில் ஏற்பட்டிருக்கும் பணி வாய்ப்புகளில் இந்தியர்கள் ஒரு லட்சம் பேரை பணியமர்த்த முடிவு செய்திருக்கிறது அந்நாடு. இதற்கான திட்டங்களையும் அந்நாடு தற்போது தொடங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஒரு லட்சம் இந்தியர்களை இஸ்ரேலில் பணியமர்த்தப்படும் பட்சத்தில், இந்தியாவிற்கும் வரும் வெளிநாட்டு பணத்தின் அளவு கணிசமான அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இந்தியாவின் நிலைப்பாடு:
இஸ்ரேலுடன் பல்லாண்டு காலமாகவே வணிகத் தொடர்பு கொண்டிருக்கும் இந்தியா, இந்த பிரச்சினையிலும் இஸ்ரேலின் பக்கமே நிற்கிறது. மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமருடன் சேர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றனர். ஐநாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் நிறுத்த வாக்கெடுப்பை இந்தியா தவிர்த்தது, இரு நாடுகளுக்கிடையிலான உறவை பலப்படுத்தும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த வாக்கெடுப்புக்காக அளிக்கப்பட்ட அறிக்கையில் ஹமாஸ் என்ற வார்த்தை இடம்பெறாததைக் கண்டித்த அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு இஸ்ரேல் ஆதரவு நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்திருந்தன. தற்போது இஸ்ரேலுக்கான ஆதரவு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவதைத் தொடர்ந்து, இந்தியர்களைப் பணியில் அமர்த்தும் முடிவை இஸ்ரேல் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.