LOADING...
₹12 லட்சம் வரை சம்பாதிச்சாலும் ITR ஃபைல் பண்ணணுமா? வருமான வரித்துறையின் விதிகள்! அசால்ட்டா இருந்தா அபராதம் நிச்சயம்
வரி கட்ட தேவையில்லை என்றாலும் பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய வருமான வரி விதிமுறைகள்

₹12 லட்சம் வரை சம்பாதிச்சாலும் ITR ஃபைல் பண்ணணுமா? வருமான வரித்துறையின் விதிகள்! அசால்ட்டா இருந்தா அபராதம் நிச்சயம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 25, 2026
09:22 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தற்பொழுது வருமான வரி தாக்கல் செய்யும் காலம் தொடங்கியுள்ள நிலையில், வரி செலுத்தத் தேவையில்லாத வருமானம் கொண்ட பலரும் தங்களுக்கு ஐடிஆர் (ITR) தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், வருமான வரித்துறையின் விதிகளின்படி, உங்களுக்கு எவ்வித வரிச் சுமையும் இல்லாத போதும், சில குறிப்பிட்ட நிதியியல் பரிவர்த்தனைகளை நீங்கள் மேற்கொண்டிருந்தால் சட்டப்படி ITR தாக்கல் செய்வது கட்டாயமாகும்.

அடிப்படை வரம்பு

₹12 லட்சம் வரை வரி இல்லை; ஆனால் அடிப்படை வரம்பு என்ன?

மத்திய அரசின் புதிய வரி முறையின் கீழ், பிரிவு 87Aன் படியான வரித் தள்ளுபடி மூலம் ₹12 லட்சம் வரை ஈட்டுபவர்களுக்கு வரி பூஜ்ஜியமாக மாற்றப்பட்டுள்ளது. (சம்பளத்தாரர்களுக்கு ₹75,000 நிலையான கழிவு சேர்த்து ₹12.75 லட்சம் வரை வரி இல்லை). ஆனால், இங்குதான் ஒரு முக்கிய ட்விஸ்ட் உள்ளது. இந்த ₹12 லட்சம் என்பது தள்ளுபடி வரம்பே தவிர, அடிப்படை வரி விலக்கு வரம்பு அல்ல. புதிய வரி முறையின் கீழ் அடிப்படை வரி விலக்கு வரம்பு வெறும் ₹4 லட்சம் மட்டுமே (பழைய முறையில் ₹2.5 லட்சம்). எனவே, உங்கள் மொத்த வருமானம் தள்ளுபடிகளுக்கு முன்பு இந்த அடிப்படை வரம்பைத் தாண்டினாலே, வரி பூஜ்ஜியமாக இருந்தாலும் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.

ஐடிஆர் தாக்கல்

வரி இல்லாவிட்டாலும் நீங்கள் கட்டாயம் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டிய சூழ்நிலைகள்

வெளிநாட்டு சொத்துக்கள் அல்லது முதலீடுகள்: நீங்கள் அமெரிக்கப் பங்குகள், வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்திருந்தாலோ, அல்லது வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் கையெழுத்திடும் அதிகாரம் பெற்றிருந்தாலோ, உங்களுக்கு வரி இல்லாவிட்டாலும் கட்டாயம் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவு: ஒரு நிதியாண்டில் உங்களுக்காகவோ அல்லது உங்களைச் சார்ந்த பிற நபர்களுக்காகவோ வெளிநாட்டுப் பயணங்களுக்காக நீங்கள் ₹2 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்திருந்தால், ஐடிஆர் தாக்கல் செய்வது அவசியமாகும்.

Advertisement

டிடிஎஸ் 

வரி இல்லாவிட்டாலும் நீங்கள் கட்டாயம் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டிய சூழ்நிலைகள்

அதிகப்படியான டிடிஎஸ் (TDS / TCS) பிடித்தம்: நிதியாண்டில் உங்களது பிக்சட் டெபாசிட் வட்டி அல்லது தொழில்முறை கட்டணங்களில் இருந்து பிடிக்கப்பட்ட ஒட்டுமொத்த TDS அல்லது TCS அளவு சாதாரண மக்களுக்கு ₹25,000 வரம்பையும், மூத்த குடிமக்களுக்கு ₹50,000 வரம்பையும் தாண்டினால், நீங்கள் கண்டிப்பாக ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். இதன் மூலமே பிடித்தம் செய்யப்பட்ட கூடுதல் தொகையை நீங்கள் ரீஃபண்ட் பெற முடியும். வங்கிகளில் பெரிய அளவிலான டெபாசிட்டுகள்: ஒரு நிதியாண்டில் உங்களது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளில் ₹50 லட்சத்திற்கும் மேலாகவோ, அல்லது நடப்புக் கணக்குகளில் ₹1 கோடிக்கும் மேலாகவோ ரொக்கப் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், வருமான வரித் தாக்கல் கட்டாயமாகிறது.

Advertisement

தொழில்

வரி இல்லாவிட்டாலும் நீங்கள் கட்டாயம் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டிய சூழ்நிலைகள்

வணிக விற்றுமுதல்: தொழில் செய்பவர்களின் ஒட்டுமொத்த லாபம் எவ்வளவு என்பது முக்கியமல்ல.உங்களது ஒட்டுமொத்த வணிக விற்றுமுதல் ஒரு நிதியாண்டில் ₹60 லட்சத்தைத் தாண்டினால் நீங்கள் கண்டிப்பாக ஐடிஆர் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். தொழில்முறை ரசீதுகள்: ஃப்ரீலான்ஸர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆலோசகர்கள் போன்ற தொழில் வல்லுநர்களின் ஒட்டுமொத்த வருவாய் ஒரு நிதியாண்டில் ₹10 லட்சத்தை மிஞ்சினால் அவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். அதிகப்படியான மின்சாரக் கட்டணம்: உங்களது வீடு அல்லது வணிக நிறுவனத்தின் மின்சாரப் பயன்பாட்டிற்கான கட்டணம் ஒரு நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக ₹1 லட்சத்தைத் தாண்டினாலும் நீங்கள் வருமான வரித் துறையின் ரேடாருக்குள் வருவீர்கள் என்பதால் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.

பூஜ்ஜியம் ஐடிஆர்

பூஜ்ஜியம் ஐடிஆர் (Zero ITR) தாக்கல் செய்வதன் நன்மைகள்

முறையான வருமான வரித் தாக்கல் உங்களுக்கான அதிகாரப்பூர்வ வருமான சான்றாக மாறுவதுடன், எதிர்காலத்தில் நீங்கள் வீட்டுக் கடன், வாகனக் கடன் அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதற்கான விசா விண்ணப்பிக்கும் போது மிக முக்கிய ஆவணமாகப் பயன்படும். எனவே தேவையற்ற அபராதங்களைத் தவிர்க்க விதிகளுக்கு உட்பட்டு உங்கள் வரிகளைத் தாக்கல் செய்யுங்கள்.

Advertisement