இந்தாண்டு இந்தியாவில் புதிய பங்குகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் நிறுவனங்கள்
கடந்த 2023ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 57 நிறுவங்கள், தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தைகளில் புதிய பங்குகளை வெளியிட்டிருக்கின்றன. இந்த புதிய பங்குகள் வெளியீடு மூலம், அந்நிறுவனங்கள் இணைந்து மொத்தமாக ரூ.49,437 கோடி நிதியைத் திரட்டியிருக்கின்றன. 2023ஐ தொடர்ந்து, 2024-லும் பல்வேறு புதிய மற்றும் பரிச்சியமான நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டிற்கு (ஐபிஓ) விண்ணப்பித்திருக்கின்றன. அப்படி ஐபிஓவிற்கு விண்ணப்பித்திருக்கும் நிறுவனங்கள் எவை? பஜாஜ் ஆட்டோவின் ஐபிஓ வெளியீட்டிற்குப் பின்பு இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், ஐபிஓ மூலம் ரூ.5,500 கோடி வரை நிதி திரட்டத் திட்டமிட்டிருக்கிறது. பிரதானமான குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான பர்ஸ்ட்கிரையின் தாய் நிறுவனமான பிரைன்பீயும், ரூ.1,816 கோடி நிதி திரட்ட செபியிடம் ஐபிஓவிற்கு விண்ணப்பித்திருக்கிறது.
ஐபிஓவிற்கு விண்ணப்பிக்கவிருக்கும் நிறுவனங்கள்:
இந்தியாவில் கல்விநுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸின் துணை நிறுவனமான ஆகாஷ், இந்த ஆண்டு இடைப்பகுதியில் நிதி திரட்ட புதிய ஐபிஓவிற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவின் முன்னணி யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனமான போன்பே, நிதி திரட்டுவதற்காக இந்தாண்டிற்குள் ஐபிஓவிற்கு விண்ணப்பிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. சமீபத்தில் ரூ.3,500 கோடி வரை நிதி திரட்டிய ஃபார்ம்ஈஸி நிறுவனமும் விரைவில் புதிய பங்கு வெளியீட்டிற்காக செபியிடம் பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர, இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விக்கி மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைகளை வழங்கி வரும் மொபிக்விக் ஆகிய நிறுவனங்களும் இந்தாண்டு புதிய பங்குகளை வெளியிடலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது.