இந்தியாவில் குறைந்த சில்லறைப் பணவீக்கம்; ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு
இந்திய பொருளாதார நடவடிக்கைகள் குறித்த, நவம்பர் மாதத்திற்கான செய்தித்தொகுப்பை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. அதில் இந்தியாவின் பணவீக்கம் குறித்த தகவல்களை 'State of the Economy' கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறது அவ்வங்கி. அதன்படி கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியாவின் பணவீக்கமானது முறையே 5% மற்றும் 4.9% ஆக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முக்கியமாக அக்டோபரில் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு வருடாந்திர சில்லறைப் பணவீக்க விகிதமானது 4.87% ஆக குறைந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது ரிசர்வ் வங்கி நிர்ணியித்த 4% என்ற பணவீக்க அளவை விட சற்று அதிகம் என்ற போதிலும், இது கடந்த 2022-23 சராசரியான 6.7%-தத்தை விட குறைவாக இருப்பது சற்று ஆறுதல் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சராசரி சில்லறைப் பணவீக்க விகிதக் கணிப்பு:
கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சில்லறைப் பணவீக்கத்தின் அளவு 7.1% ஆக இருந்த நிலையில், 2023-24 நிதியாண்டிற்கான சில்லறைப் பணவீக்க சராசரி 5.4% ஆக குறையும் எனக் கணித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்தது, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் விலை உயர்வை உணர்த்தினாலும், சமையல் எண்ணெய்யின் விலைகள் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய பொருளாதாரமும் கணிசமான அளவில் வளர்ச்சியடைந்து வருவதாக தங்களுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. உலகளவில் பொருளாதார மந்தநிலைக்கான சாத்தியக்கூறுகள் தென்படும் போதும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் விழாக் காலத்தை முன்னிட்டு இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை எதிர்நோக்கியே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.