Loading...
ஒரே வாரத்தில் $10.5 பில்லியன் உயர்வு! சாதனை படைக்கும் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு; ஆர்பிஐ வெளியிட்ட தகவல்
இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு $692.86 பில்லியனாக உயர்வு

ஒரே வாரத்தில் $10.5 பில்லியன் உயர்வு! சாதனை படைக்கும் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு; ஆர்பிஐ வெளியிட்ட தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 07, 2026
06:17 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் $10.512 பில்லியன் அளவுக்கு உயர்ந்து மொத்தம் $692.866 பில்லியனை எட்டியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரத் தரவுகளின்படி, சர்வதேச அளவில் நிலவிய பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் வெளிநாட்டுச் செலாவணி இருப்பு தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு முந்தைய ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் $6.118 பில்லியன் அளவுக்கு அந்நிய செலாவணி உயர்ந்திருந்த நிலையில், தற்போது அதைவிட மிக அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

வெளிநாட்டு சொத்துக்கள்

தங்கம் மற்றும் வெளிநாட்டுச் சொத்து மதிப்பின் வளர்ச்சி

ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி, நாட்டின் முக்கிய அந்நியச் செலாவணிக் கூறுகளான வெளிநாட்டு கரன்சி சொத்துக்கள் $8.750 பில்லியன் அதிகரித்து மொத்தம் $564.680 பில்லியனாக உயர்ந்துள்ளது.

டாலர் மதிப்பில் கணக்கிடப்படும் இந்த வெளிநாட்டுச் சொத்துக்களில் யூரோ, பவுண்ட் மற்றும் யென் போன்ற பிற சர்வதேசக் கரன்சிகளின் மதிப்பு மாற்றங்களும் அடங்கும்.

அதேபோல, இந்தியாவின் தங்க இருப்பு மதிப்பு $1.685 பில்லியன் உயர்ந்து மொத்தம் $104.743 பில்லியனை எட்டியுள்ளது.

மேலும், சர்வதேச நிதியத்தின் சிறப்பு வரைதல் உரிமைகளின் (SDRs) மதிப்பு $48 மில்லியன் அதிகரித்து $18.666 பில்லியனாக நிலைபெற்றுள்ளது.

எஃப்சிஎன்ஆர் திட்டம்

எஃப்சிஎன்ஆர் டெபாசிட்களின் அபார வளர்ச்சி

இந்திய வங்கிகள் மூலம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடமிருந்து எஃப்சிஎன்ஆர் வைப்புத்தொகையாக ஜூலை 31 வரை சுமார் $36.7 பில்லியன் திரட்டப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போதும், ரூபாயின் மதிப்பை நிலையாகப் பாதுகாக்க இந்தத் திட்டம் பெரிதும் உதவியுள்ளது.

இந்த எஃப்சிஎன்ஆர் (பி) டெபாசிட் திட்டத்தை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவரும் திட்டம் எதுவும் இல்லை என ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், இதற்கான பூஜ்ஜியக் கட்டண ஸ்வாப் வசதி வரும் செப்டம்பர் 30 வரை தடையின்றி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மைல்கல்

$700 பில்லியன் மைல்கல்லை விரைவில் எட்டவுள்ள இந்தியா

உலகளாவிய பொருளாதார சூழல்களால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பில் சிறிய சரிவு ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது அது மிக வேகமாக மீண்டு வலுவடைந்துள்ளது.

முன்னதாக, பிப்ரவரி 27 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு எக்காலத்திலும் இல்லாத சாதனையாக $728.494 பில்லியனை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது எஃப்சிஎன்ஆர் திட்டத்தின் மூலம் இந்தியாவிற்குள் அதிகளவு மூலதனம் தொடர்ந்து ஈர்க்கப்பட்டு வருவதால், இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் மொத்த அந்நியச் செலாவணி இருப்பு மீண்டும் $700 பில்லியன் என்ற மைல்கல்லைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT