Loading...
பங்குச்சந்தையில் அதிரடி திருப்பம்: 3,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்
சென்செக்ஸ் ஒரே வாரத்தில் சுமார் 3,000 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது

பங்குச்சந்தையில் அதிரடி திருப்பம்: 3,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 04, 2026
04:37 pm

செய்தி முன்னோட்டம்

தொடர் சரிவை சந்தித்து வந்த இந்தியப் பங்குச்சந்தை, கடந்த சில வர்த்தக தினங்களில் மாபெரும் திருப்பத்தைக் கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரே வாரத்தில் சுமார் 3,000 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய பங்குச்சந்தையின் குறியீடான நிஃப்டியும் தன் பங்கிற்கு உயர்ந்து 23,800 புள்ளிகளை கடந்து சாதனைப் பாதையில் பயணிக்கிறது.

காரணங்கள்

பங்குச்சந்தை உயர்விற்கு முக்கியக் காரணங்கள்

மாதக்கணக்கில் இந்தியப் பங்குகளை விற்பனை செய்து வந்த வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், மீண்டும் இந்திய சந்தையில் பங்கை வாங்கத் தொடங்கியுள்ளனர்.

நவம்பர் 3-ஆம் தேதி ஒரே நாளில் ₹6,836.81 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கினர்.

நவம்பர் 2(₹3,114.68 கோடி) மற்றும் அக்டோபர் 30 வர்த்தகத்தையும் சேர்த்து, வெறும் 3 நாட்களில் மட்டும் ₹13,550 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது, இந்தியாவின் இறக்குமதிச் சுமையைக் குறைத்துச் சந்தை உணர்வை உயர்த்தியுள்ளது.

Q2 FY27 கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் முடிவுகள் எதிர்பார்ப்பை விடச் சிறப்பாக வெளிவந்துள்ளது அடிப்படை பலத்தை அளித்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு LTCG-12.5% ரத்து செய்ய SEBI பரிந்துரைத்துள்ளதாக வெளியான தகவல்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளன.

நிபுணர்களின் கருத்து

FII முதலீடு குறித்து நிபுணர்களின் கருத்து

ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டுப் பிரிவு அதிகாரி டாக்டர் வி. கே. விஜயகுமார்,"இந்தியப் பங்குச்சந்தையின் போக்கை மாற்றியமைத்த முதன்மையான காரணி, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் (FIIs) நிலைப்பாட்டில் ஏற்பட்ட திடீர் மாற்றமே ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்த அவர்களது விற்பனை அழுத்தம் தற்போது தலைகீழாக மாறியுள்ளது".

"தரமான பெரிய நிறுவனப் பங்குகளின் மதிப்பீடு மீண்டும் கவரும் வகையில் அமைந்துள்ளதால், நீண்டகால அடிப்படையில் பொறுமையுடன் கூடிய முதலீட்டிற்கு பலன் கிடைக்கும்" எனத்தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

லாபம்

முதலீட்டாளர்களுக்கு கிடைத்த லாபம்

கடந்த 4 வர்த்தக தினங்களில் ஏற்பட்ட இந்த இமாலய ஏற்றத்தால், பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் ₹13 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.

வரும் பட்ஜெட்டிற்கு முன்னதாக SEBI விடுத்துள்ள வரித் தளர்வு கோரிக்கைகள் அரசு தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், வெளிநாட்டு நிதி இந்தியச் சந்தைக்கு மேலும் அதிக அளவில் பாயும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ADVERTISEMENT