LOADING...
பகீர் சரிவில் இந்திய ரூபாய்; ஒரு டாலர் 91 ரூபாயைத் தாண்டியது; முழு விவரம் இதோ
அமெரிக்கா-ஈரான் போரால் டாலருக்கு நிகரான மதிப்பு ரூ.91 ஐ தாண்டியது

பகீர் சரிவில் இந்திய ரூபாய்; ஒரு டாலர் 91 ரூபாயைத் தாண்டியது; முழு விவரம் இதோ

எழுதியவர் Sekar Chinnappan
Mar 02, 2026
10:46 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் பதற்றம் காரணமாக இந்தியப் பொருளாதாரம் பெரும் சவாலைச் சந்தித்துள்ளது. இன்று (மார்ச் 2) திங்கட்கிழமை வர்த்தகத் தொடக்கத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ. 91 க்கும் கீழே சரிந்தது. இது கடந்த ஒரு மாதத்தில் காணப்பட்ட மிகக் குறைந்த மதிப்பாகும். போர்ச் சூழலால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கித் திரும்புவதும், டாலருக்கான தேவை அதிகரிப்பதும் இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

தாக்கம்

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அதன் தாக்கம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென ஒரு பேரல் 80 டாலரைத் தாண்டியது. பின்னர் சற்று குறைந்து 77 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது. இது முந்தைய விலையை விட 6 சதவீதம் அதிகமாகும். இந்தியா தனது எண்ணெய் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்வதால், இந்த விலை உயர்வு நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரித்து ரூபாயின் மதிப்பை மேலும் பலவீனப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் ரூபாயின் மதிப்பு ரூ.91.50 வரை செல்லக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தங்கம் வெள்ளி விலை

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி ஏற்றம்

உலகளாவிய போர் பதற்றம் நிலவும் காலங்களில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியைப் பாதுகாப்பான புகலிடமாகக் கருதுகின்றனர். இதன் விளைவாக இன்று மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. ஏப்ரல் மாதத்திற்கான தங்க எதிர்கால ஒப்பந்த விலை 3.16 சதவீதம் உயர்ந்து 10 கிராம் தங்கம் ரூ. 1,67,221 க்கு வர்த்தகமானது. மே மாதத்திற்கான வெள்ளி எதிர்கால ஒப்பந்த விலை 3.43 சதவீதம் உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,92,347 ஆக அதிகரித்தது.

Advertisement

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்களின் மனநிலை

மத்திய கிழக்கு நாடுகளின் மோதல் ஒரு பிராந்தியப் போராக உருவெடுத்துள்ளதால், பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற முதலீடுகளைத் தவிர்த்துவிட்டு, தங்கம் மற்றும் அமெரிக்க டாலர் போன்ற பாதுகாப்பான சொத்துக்களில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மோதல் நீடித்தால் சர்வதேச சந்தையில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement