ரஷ்யா மீது தடை, ஆனால் இந்தியாவிலிருந்து இறக்குமதி ! மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியாவின் எரிபொருள் ஏற்றுமதி 43% உயர்வு
செய்தி முன்னோட்டம்
ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகளுக்கு, இந்திய சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளின் அளவு செப்டம்பர் மாதத்தில் 43% வரை அதிகரித்துள்ளது. ஆற்றல் மற்றும் தூய்மையான காற்று பற்றிய ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி, இந்தியா, துருக்கி மற்றும் புருனே நாடுகளில் உள்ள ஆலைகள் சுமார் 1 பில்லியன் யூரோ ($1.2 பில்லியன்) மதிப்பிலான எரிபொருட்களைத் தடை விதித்த நாடுகளுக்கு அனுப்பியுள்ளன. இதில் சிங்கப்பூர், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பிரதான இறக்குமதியாளர்களாக உள்ளன.
ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் ஜாம்நகர் ஆலையின் ஏற்றுமதி
ஐரோப்பிய ஒன்றிய துறைமுகங்களில் இறக்கப்பட்ட முக்கிய எரிபொருட்களை ஏற்றிய கப்பல்களில் 7-ல் 6 கப்பல்கள் குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்தே சென்றுள்ளன.
ரஷ்ய கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ள நிலையிலும் இத்தகைய ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.
ஜாம்நகர் ஆலை அமெரிக்காவிற்கும் 122 மில்லியன் யூரோ மதிப்பிலான எரிபொருளை அனுப்பியுள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் ஜாம்நகர் ஆலை இறக்குமதி செய்த கச்சா எண்ணெயில் 32% ரஷ்யாவை சேர்ந்ததாகும்.
விதிவிலக்கு
விதிவிலக்குகளைப் பயன்படுத்தும் சுத்திகரிப்பு ஆலைகள்
ரஷ்யக் கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மூன்றாம் நாடுகளின் சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் உலகளாவிய விநியோக சங்கிலிக்குள் நுழைவதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இல்லை என அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
நிகர கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய விதிகளில் சில விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
எனவே, கடந்த 6 மாதங்களில் ரஷ்ய கச்சா எண்ணெயைச் சுத்திகரித்த எந்தவொரு ஆலையிலிருந்தும் பொருட்களை இறக்குமதி செய்ய முழுத் தடை விதிக்க வேண்டும் என ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
இறக்குமதி சரிவு
இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி சரிவு
அதேவேளையில், செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 13% சரிவடைந்து, ஏப்ரல் மாதத்திற்கு பிறகான குறைந்தபட்ச அளவைப் பதிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஜாம்நகர் ஆலையில் 27%-மும், பரதீப் ஆலையில் 21%-மும் இறக்குமதி குறைந்துள்ளது.
இருப்பினும், செப்டம்பரில் 4.1 பில்லியன் யூரோக்களை ரஷ்ய எரிபொருட்களுக்காக செலவிட்டு, சீனாவிற்கு அடுத்தபடியாக ரஷ்யாவின் இரண்டாவது மிகப்பெரிய எரிபொருள் வாடிக்கையாளராக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது.
இதில் கச்சா எண்ணெய் மட்டுமே 3.6 பில்லியன் யூரோ மதிப்பிற்கு வாாங்கப்பட்டுள்ளது.