அமெரிக்காவின் பென்டகனை பின்தள்ளிய சூரத்தைச் சேர்ந்த வைர வர்த்தக மையக் கட்டிடம்
கடந்த 80 ஆண்டுகளாக, மொத்தப் பரப்பளவின் அடிப்படையில் உலகின் பெரிய அலுவலகக் கட்டிடம் என்ற பெயரைக் கொண்டிருந்தது அமெரிக்கா பாதுகாப்புத்துறையின் தலைமையகமான பென்டகன். தற்போது பென்டகனை பின்தள்ளி, உலகின் பெரிய அலுவலகக் கட்டிடம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது சூரத் டைமண்டு போர்ஸ் (Surat Diamond Bourse). இந்தியாவின் வைர நகரம் என அழைக்கப்படும் சூரத்தில் உள்ள வைர வியாபாரிகள் மற்றும் வைரம் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் அனைவருக்குமான ஒற்றை மையமாக இயங்கவிருக்கிறது இந்த வைர வர்த்தக மையமான SDA. 65,000 நபர்கள் வரை பணிபுரியவிருக்கும் இந்தக் கட்டிடத்தை வரும் நவம்பரில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரத் டைமண்டு போர்ஸ்:
15 அடுக்குகளைக் கொண்ட இந்த SDA கட்டிடமானது, 35 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் ஒன்பது கட்டமைப்புகளைக் கொண்டிருக்கிறது. இந்த ஒன்பது கட்டமைப்புகளையும் இணைக்கும் வகையில் நடுவில் நீண்ட கட்டமைப்பு ஒன்று இடம்பெற்றிருக்கிறது. 7.1 மில்லியன் சதுரடி பரப்பளவைக் கொண்டிருக்கும் இந்த வைர வர்த்தக மையக் கட்டிடத்தை முழுமையாகக் கட்டி முடிக்க நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டிருந்திருகிறது. மார்ஃபோஜெனிசிஸ் என்ற இந்திய கட்டிடக்கலை நிறுவனம் இந்த SDA கட்டிடத்தை வடிமைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைர வர்த்தகக் கட்டிடம் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே, இதில் உள்ள அனைத்து அலுவலகங்கலும் வைர வர்த்தக வியாரிகளால் வாங்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.