LOADING...
180 பில்லியன் ரூபாய் இழப்பில் இந்திய விமான போக்குவரத்துத் துறை, என்ன காரணம்?
விமான போக்குவரத்து

180 பில்லியன் ரூபாய் இழப்பில் இந்திய விமான போக்குவரத்துத் துறை, என்ன காரணம்?

எழுதியவர் Prasanna
Mar 10, 2026
03:36 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச அளவில் பிரச்சினைகள் ஏற்படும் போது முதலில் பாதிக்கப்படுவது விமானப் போக்குவரத்துத் துறை தான். அந்த வகையில் தற்போதும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பிரச்சினையில் விமான போக்குவரத்துத் துறையே முதலிலும் அதிகளவிலும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. மத்திய கிழக்கில் அனைத்து நாடுகளிலும் போர் பதற்றம் நிலவி வருவதால், அந்தப் பகுதியில் இந்திய விமானங்கள் பறக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்தியாவிலிருந்து 50% சர்வதேச விமானப் போக்குவரத்து இந்தப் பகுதியின் மூலமே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 28 பிப்ரவரி முதல் 2 மார்ச் வரை, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மட்டும் சுமார் 1,100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்ற விமான நிலையங்களிலும் இதே நிலையே இருக்கிறது.

இந்தியா

உயரும் இழப்பு

சேவை பாதிப்பு, எரிபொருள் செலவு உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு என அனைத்து தரப்பிலிருந்து விமானப் போக்குவரத்துத் துறை பெரும் இழப்புகளை எதிர்நோக்கியே காத்திருக்கிறது. விமானங்களில் ஏவியேஷன் டர்பைன் ஃப்யூல் (ATF) என்ற சிறப்பு எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. ஒரு விமானத்திற்கான செலவில் 30% முதல் 40% வரை இந்த ATF தான். பல்வேறு காரணங்களினால் கச்சா எண்ணெயின் விலை 11% வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விமான எரிபொருளின் விலையும் உயரும் என்றே தெரிகிறது. தற்போது ATF-ன் விலை 1 கிலோலிட்டர் ரூ.96,638 என்ற விலையை எட்டியுள்ளது. இது பிப்ரவரி மாதத்தை விட 6% அதிகமாகும்.

விமான போக்குவரத்துத் துறை

180 பில்லியன் ரூபாய் இழப்பு

ATF-ன் விலை பேரலுக்கு 1 டாலர் உயர்ந்தாலும் ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவை இண்டிகோ சந்திக்க நேரிடும். எரிபொருள் முதல் ஒப்பந்தம் வரை பல்வேறு பரிவர்த்தனைகளையும் விமான நிறுவனங்கள் அமெரிக்க டாலர்களிலேயே மேற்கொண்டு வருகின்றன. என அமெரிக்க டாலர்களுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரியும் போது லாபமும் குறைகிறது. ரூபாயின் மதிப்பு 1% குறைந்தாலும், லாபம் 5-6% வரை குறையும். இதற்கு அடுத்தபடியாக சேவை பாதிக்கப்படுவது. விமானம் எவ்வளவு அதிகமாக பறக்கிறதோ அவ்வளவு அதிக லாபம். ஆனால் ரத்து செய்யப்படும் விமானங்களினால் லாபம் ஈட்ட முடியாது. இவையெல்லாம் சேர்ந்து இந்த 2026ம் நிதியாண்டில் விமான போக்குவரத்துத் துறை 180 பில்லியன் ரூபாய் இழப்பைச் சந்திக்கும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.

Advertisement