வெளிச்சந்தையில் இருந்து இயற்கை எரிவாயு வாங்க மத்திய அரசு திட்டம்
செய்தி முன்னோட்டம்
கடைசி நிமிடத்தில் நிலவும் எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்க, இந்தியா வெளிச் சந்தையிலிருந்து (Spot Market) இயற்கை எரிவாயுவை அவசரமாகக் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி எரிவாயு நிறுவனமான கெயில் (GAIL), திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை உடனடி சந்தையில் இருந்து வாங்க டெண்டர் விடுத்துள்ளது. வழக்கமாக நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் எரிவாயு வாங்கப்படும் நிலையில், தற்போது நிலவும் தட்டுப்பாட்டைப் போக்க இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்குவதால் நாட்டின் மின்சாரத் தேவை கடுமையாக உயர்ந்துள்ளது. நிலக்கரி மூலம் இயங்கும் மின் நிலையங்களுக்குப் பாரம் குறைய, எரிவாயு மூலம் இயங்கும் மின் நிலையங்களை முழு திறனுடன் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியா
தட்டுப்பாட்டிற்கான காரணம்:
சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடங்கல்களால் எரிவாயு வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக, ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றம் காரணமாக எரிவாயு கப்பல்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாட்டில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்கவும், உரத் தொழிற்சாலைகள் மற்றும் சிஎன்ஜி (CNG) விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்த விலையுயர்ந்த 'ஸ்பாட் கேஸ்' கொள்முதல் செய்யப்படுகிறது. அதிக விலை என்றாலும், தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதே அரசின் தற்போதைய முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் வரும் வாரங்களில் மின் உற்பத்தி சீராக இருக்கும் என்றும், பொதுமக்களுக்கான எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.