இந்தியா குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தவறு; மத்திய அரசு பதிலடி
இந்தியாவின் அரசாங்க கடன் பாதிப்புகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட சில கணிப்புகள் உண்மை நிலையை பிரதிபலிக்கும் வகையில் இல்லை என மத்திய அரசு அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய அரசு, இந்தியா ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்பட்டுள்ளது மற்றும் இன்னும் 2002 ஆம் ஆண்டின் கடன் மட்டத்திற்கு கீழேயே உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 2027-28 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொது அரசாங்க கடன் 100 சதவீதத்தை தாண்டும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டவை
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்திற்கான பொது அரசாங்க கடன் அதே காலகட்டத்தில் 70 சதவீதத்திற்கும் குறைவாக குறையக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்து கூறுகையில், "மாநிலங்கள் தனித்தனியாக தங்கள் நிதி பொறுப்புச் சட்டத்தையும் இயற்றியுள்ளன. இது அந்தந்த மாநில சட்டமன்றங்களால் கண்காணிக்கப்படுகிறது. எனவே, பொது அரசாங்க கடன் நடுத்தரத்தில் நீண்ட காலத்திற்கு கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்று தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீனாவிற்கான கடன்கள் அவற்றின் ஜிடிபியில் முறையே 160, 140 மற்றும் 200 சதவீதமாக உள்ள நிலையில், அவை இந்தியாவோடு ஒப்பிடுகையில் மிக மோசமான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.