
புதிய வரிவிதிப்பு நடைமுறையால் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகளை இந்தியா நிறுத்திவைப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியா, அமெரிக்காவிற்கான பெரும்பாலான அஞ்சல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 25 முதல் அமலுக்கு வரும் இந்த முடிவு, $100 வரையிலான மதிப்புள்ள கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை தவிர்த்து, மற்ற அனைத்து அஞ்சல் சேவைகளுக்கும் பொருந்தும். அமெரிக்க நிர்வாகம் ஜூலை 30 அன்று பிறப்பித்த புதிய வரிவிதிப்பு உத்தரவுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, ஆகஸ்ட் 29 முதல் $800 மதிப்பு வரையிலான பொருட்களுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கை ரத்து செய்கிறது. அமெரிக்காவின் இந்த புதிய விதியின்படி, அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களுக்கும் நாட்டின் சுங்க வரிகளின்படி கட்டணங்கள் விதிக்கப்படும்.
அஞ்சல் சேவை
கூடுதல் விளக்கம் வரும் வரை சேவைகள் நிறுத்தம்
அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை மற்றும் அமெரிக்க அஞ்சல் சேவையிடமிருந்து கூடுதல் தெளிவுபடுத்தல்கள் கிடைக்கும் வரை இந்த இடைநிறுத்தம் தொடரும் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு முடிவானது, உலகெங்கிலும் உள்ள பல அஞ்சல் சேவைகளை பாதித்துள்ளது. தென் கொரியா, சிங்கப்பூர், ஜப்பான், பின்லாந்து மற்றும் நார்வே போன்ற நாடுகளும் ஏற்கனவே இதேபோன்ற நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. வரி வசூல் மற்றும் தரவு சமர்ப்பிப்பு நடைமுறைகள் குறித்த தெளிவின்மையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தற்போதுள்ள மாற்றங்கள் காரணமாக, அமெரிக்காவிற்கு அனுப்ப முடியாத பொருட்களுக்கு வாடிக்கையாளர்கள் பணத்தை திரும்பப் பெறலாம் என்றும் அஞ்சல் துறை அறிவித்துள்ளது.