
தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரிப்பு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $305 மில்லியன் உயர்வு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $305 மில்லியன் அதிகரித்து, மார்ச் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் $654.271 பில்லியனை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (மார்ச் 21) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
முன்னதாங்க, முந்தைய வாரத்தில் $15.267 பில்லியனின் குறிப்பிடத்தக்க உயர்வைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் மிகக் கூர்மையான வாராந்திர அதிகரிப்பை பெற்ற நிலையில், தொடர்ந்து இரண்டாவது வாரமாக மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கி நடத்திய $10 பில்லியன் அந்நிய செலாவணி பரிமாற்றமே இந்த அதிகரிப்பிற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், நாணய ஏற்ற இறக்கத்தை நிர்வகிக்க மறுமதிப்பீடு மற்றும் மத்திய வங்கி தலையீடுகள் காரணமாக ஒட்டுமொத்த இருப்புக்கள் ஏற்ற இறக்கமாக உள்ளன.
விபரங்கள்
அந்நியச் செலாவணி விபரங்கள்
சமீபத்திய தரவுகள், இருப்புக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி சொத்துக்கள் $96 மில்லியன் குறைந்து $557.186 பில்லியனாக குறைந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றன.
இந்த சொத்துக்கள் பல நாணயங்களில் வைத்திருப்பதால், டாலர் அடிப்படையில் அவற்றின் மதிப்பு நாணய மதிப்பு உயர்வு அல்லது தேய்மானத்தின் அடிப்படையில் ஏற்ற இறக்கமாக இருக்கும்.
தங்க இருப்பு $66 மில்லியன் அதிகரித்து, மொத்தம் $74.391 பில்லியனாக உயர்ந்துள்ளது. சிறப்பு பெறுதல் உரிமைகளும் (SDRகள்) $51 மில்லியன் அதிகரித்து $18.262 பில்லியனாக உயர்ந்துள்ளது.
கூடுதலாக, சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் இருப்பு நிலை $283 மில்லியன் அதிகரித்து $4.431 பில்லியனாக உள்ளது.
சமீபத்திய ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், அந்நிய செலாவணி இருப்பு இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானதாக உள்ளது.