இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஐந்தாவது வாரமாக சரிவு; ஆர்பிஐ தகவல்
நவம்பர் 1 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.6 பில்லியன் டாலர் குறைந்து 682.13 பில்லியன் டாலராக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) வெளியிட்ட தரவு காட்டுகிறது. இதன் மூலம் செப்டம்பர் இறுதியில் சாதனை அளவாக 700 பில்லியன் டாலரை தாண்டிய கையிருப்பு, பின்னர் தொடர்ந்து ஐந்தாவது வாரமாக சரிவை சந்தித்துள்ளது. எனினும், அந்நிய செலாவணி கையிருப்பில் ஒரு பகுதியாக இருக்கும் தங்க இருப்பு, வாரத்தில் $1.2 பில்லியன் அதிகரித்து $69.8 பில்லியனாக உள்ளது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது. தொழில் வல்லுனர்களின் கூற்றுப்படி, தங்கம் இப்போது பாதுகாப்பான சொத்தாக செயல்படுகிறது.
தங்கம் கையிருப்பு அதிகரிப்பு
இந்தியாவில் பணவீக்கம் மிதமானதாக இருந்தாலும், தங்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு 2018 முதல் 210 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் மாத இறுதியில் 704.885 பில்லியன் டாலராக உயர்ந்து உலகளவில் சீனா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு அடுத்தபடியாக அந்நிய செலாவணி கையிருப்பு அளவில் நாட்டை 4 வது இடத்திற்கு கொண்டு சென்றது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஒட்டுமொத்தமாக $34.5 பில்லியன் உயர்ந்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் படி, 11.2 மாதங்களுக்கு இறக்குமதியை ஈடுகட்ட போதுமானது. இது பொருளாதாரத்தின் வலுவான மேக்ரோ பொருளாதார அடிப்படைகளை பிரதிபலிக்கிறது.