Page Loader
ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில் 4.35 டிரில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறை; மத்திய அரசு தகவல்
4.35 டிரில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறை; மத்திய அரசு தகவல்

ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில் 4.35 டிரில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறை; மத்திய அரசு தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 30, 2024
05:13 pm

செய்தி முன்னோட்டம்

2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை ரூ.4.35 டிரில்லியனாக உள்ளதாக மத்திய அரசு திங்கட்கிழமை (செப்டம்பர் 30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டிற்கான மொத்த மதிப்பீட்டில் 27 சதவீதம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவுகளின்படி, இந்த காலகட்டத்திற்கான நிகர வரி வரவுகள் ரூ. 8.74 டிரில்லியன் அல்லது ஆண்டு இலக்கில் 34 சதவீதம் ஆக உள்ளது. இந்த காலகட்டத்தில் அரசின் மொத்த செலவினம் ரூ.16.52 டிரில்லியன் அல்லது ஆண்டு இலக்கில் சுமார் 34 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.16.72 டிரில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

செலவு குறைவு

பொதுத் தேர்தல்கள் காரணமாக குறைந்த அரசின் செலவு

முதல் ஐந்து மாதங்களில், மத்திய அரசின் மூலதனச் செலவு அல்லது உள்கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான செலவு 3.01 டிரில்லியன் ரூபாய் அல்லது ஆண்டு இலக்கில் 27 சதவீதம் ஆக இருந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ.3.74 டிரில்லியனாக இருந்தது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் முழுமையாக மக்களவைத் தேர்தலை நாடு எதிர்கொண்டதால், உள்கட்டமைப்புகளில் அதிக அளவு செலவு செய்யப்படவில்லை என்பதால், செலவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசாங்கம் தனது சமீபத்திய பட்ஜெட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9 சதவீதமாக தனது நிதிப் பற்றாக்குறை இலக்கை நிர்ணயித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 5.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.