ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா மெகா வர்த்தக ஒப்பந்தம்; இனி கார், ஒயின் விலை குறையும்; ஏற்றுமதி எகிறும்!
செய்தி முன்னோட்டம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா ஆகியோர் பங்கேற்ற 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இன்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. 2007-இல் தொடங்கி 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த பேச்சுவார்த்தை இன்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. 'ஒப்பந்தங்களின் தாய்' என இந்த ஒப்பந்தத்தை அவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி பெருமளவு குறைக்கப்படும். இது குறித்து பிரதமர் மோடியும் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Prime Minister Narendra Modi says, "...Manufacturing will get a huge boost from this trade deal with the EU, and the services sector will also expand. The Free Trade Agreement will boost the confidence of every investor and businessman to invest in India..." pic.twitter.com/G2HknG4DJH
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) January 27, 2026
விலை குறைப்பு
என்னென்ன பொருட்களின் விலை குறையும்?
சொகுசு கார்கள்: பிஎம்டபிள்யூ (BMW), வோக்ஸ்வாகன், மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற ஐரோப்பிய கார்களுக்கான இறக்குமதி வரி 110%-லிருந்து உடனடியாக 40% ஆகக் குறைக்கப்படும். ஒயின் மற்றும் மதுபானங்கள்: ஐரோப்பிய ஒயின் வகைகளின் விலையும் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இந்தியாவின் ஜவுளி, தோல் பொருட்கள், ஆபரணங்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரசாயனத் துறைகளுக்கு ஐரோப்பிய சந்தையில் நேரடி வரிவிலக்கு கிடைக்கும். இதன் மூலம் வங்கதேசம் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுடன் இந்திய ஏற்றுமதியாளர்கள் சரிசமமாகப் போட்டியிட முடியும். அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்புகள் மற்றும் சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்குப் பெரிதும் உதவும்.
பாதுகாப்பு
இதர முக்கிய ஒப்பந்தங்கள்
வர்த்தகம் மட்டுமின்றி, 'பாதுகாப்பு மற்றும் ராணுவக் கூட்டாண்மை' (Security and Defence Partnership) ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் சைபர் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் இரு தரப்பும் இணைந்து செயல்படும். மேலும், இந்திய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் ஐரோப்பாவிற்கு எளிதாக சென்று வர 'மொபிலிட்டி' (Mobility) ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உலக ஜிடிபி-யில் (GDP) 25 சதவீதத்தைக் கொண்ட மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமைப்பை உருவாக்கும் எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.