தமிழகத்திற்கு மட்டும் ஐந்து; மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான 7 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மின்னணுவியல் பொருட்கள் உற்பத்தியை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் (ECMS) கீழ் ஏழு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதாக அறிவித்துள்ளார். 249 திட்ட முன்மொழிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த முதல் தொகுப்பு, வடிவமைப்பு சார்ந்த, சுயசார்பு கொண்ட மின்னணுவியல் உற்பத்திக்கு இந்தியாவை இட்டுச் செல்லும் ஒரு மூலோபாயத் தொடக்கத்தைக் குறிக்கிறது. ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த ஏழு திட்டங்களுக்காக மொத்தம் ₹5,532 கோடி முதலீடு செய்யப்படும் என்றும், இதன் மூலம் 5,195 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனா
சீனாவின் நிலைக்கு முன்னேற்றும் முயற்சி
மின்னணுவியல் மதிப்புச் சங்கிலிக்கு முக்கியமான உள்ளீடுகளான அச்சிடப்பட்ட சர்க்யூட் பலகைகள் (PCB), கேமரா தொகுதிகள், காப்பர் லேமினேட்டுகள் மற்றும் பாலிபுரோப்பிலீன் ஃபிலிம்கள் ஆகியவற்றின் உற்பத்திக்கான திட்டங்களும் இதில் அடங்கும். இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, இந்தியாவின் மின்னணுவியல் இறக்குமதிச் செலவை ஆண்டுக்கு ₹18,000-20,000 கோடி வரை குறைக்கும் என்றும், உள்நாட்டு மதிப்பு கூட்டலைச் சீனாவின் தற்போதைய நிலைக்குச் சமமாக உயர்த்தும் என்றும் வைஷ்ணவ் வலியுறுத்தினார். ஒப்புதல் பெற்ற நிறுவனங்களில், காயென்ஸ் சர்கியூட்ஸ் நான்கு திட்டங்களைப் பெற்றுள்ளது. எஸ்ஆர்எப் லிமிடெட் நிறுவனம், மின்தேக்கிகளில் பயன்படுத்தப்படும் பாலிபுரோப்பிலீன் ஃபிலிம் உற்பத்திக்கான இந்தியாவின் முதல் ஆலையை நிறுவும்.
தமிழகம்
தமிழகத்தில் ஐந்து திட்டங்கள்
இந்தத் திட்டங்களில் ஐந்து திட்டங்கள் தமிழ்நாட்டிலும், தலா ஒன்று ஆந்திரா மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் அமைந்துள்ளன. இந்த புவியியல் பரவல், பெருநகரங்களைத் தாண்டி உயர்தொழில்நுட்ப உற்பத்தியின் சீரான பிராந்திய வளர்ச்சியை உறுதிப்படுத்துவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். ECMS திட்டமானது, முக்கிய உதிரிபாகங்களுக்கான ஒரு நிலையான அடித்தளத்தை நிறுவுவதன் மூலமும், இந்திய நிறுவனங்களை உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஒருங்கிணைப்பதன் மூலமும் இந்தியாவை ஒரு உலகளாவிய மின்னணுவியல் உற்பத்தி மையமாக மாற்றும் லட்சியத்தை நோக்கி உறுதியான நடவடிக்கையை எடுத்துள்ளது.