கடைசி நிமிடம் வரை காத்திருக்காதீங்க! அட்வான்ஸ் டேக்ஸ் முதல் டிடிஎஸ் வரை; மார்ச் 31க்குள் முடிக்க வேண்டிய முக்கிய பணிகள்
செய்தி முன்னோட்டம்
2025-26 நிதியாண்டு முடிவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அபராதம் மற்றும் வட்டித் தொகையைத் தவிர்க்க சில முக்கியமான வருமான வரி நடைமுறைகளை மார்ச் 31, 2026க்குள் முடிப்பது கட்டாயமாகும். அட்வான்ஸ் டேக்ஸ் (மார்ச் 15): ஒரு நிதியாண்டில் உங்களின் மொத்த வரிப் பொறுப்பு ₹10,000க்கு மேல் இருந்தால், நீங்கள் முன்பண வரி செலுத்த வேண்டும். இது நான்காவது மற்றும் இறுதித் தவணைக்கான காலக்கெடு ஆகும். 'Presumptive Taxation' (பிரிவு 44AD & 44ADA) திட்டத்தின் கீழ் வருமானம் காட்டுபவர்கள், தங்களின் முழு முன்பண வரியையும் இதே மார்ச் 15க்குள் செலுத்த வேண்டும்.
அரசு அலுவலகங்கள்
அரசு அலுவலகங்களுக்கான படிவம் 24G
சலான் இன்றி டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் தொகையைச் செலுத்தும் அரசு அலுவலகங்கள், பிப்ரவரி 2026க்கான படிவம் 24G அறிக்கையை மார்ச் 15க்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல், ஜனவரி 2026இல் பிடிக்கப்பட்ட வரிகளுக்கான சான்றிதழ்களை வழங்க மார்ச் 17 கடைசித் தேதியாகும். இது குறிப்பாகக் கீழ்க்கண்ட பிரிவுகளுக்குப் பொருந்தும்: சொத்து விற்பனை (பிரிவு 194-IA), தனிநபர்கள் செலுத்தும் வாடகை (பிரிவு 194-IB), டிஜிட்டல் சொத்துக்கள்/கிரிப்டோ பரிமாற்றம் (பிரிவு 194-S). பிப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட சொத்து பரிமாற்றம் அல்லது வாடகை கட்டணங்களுக்கான டிடிஎஸ் மற்றும் அதற்கான சலான்-கம்-ஸ்டேட்மெண்ட் தாக்கல் செய்ய மார்ச் 30 கடைசி நாளாகும்.
வெளிநாடு
பன்னாட்டு வரி அறிக்கை
சர்வதேச நிறுவனங்களின் இந்தியக் கிளைகள் அல்லது தாய் நிறுவனங்கள், 2024-25 நிதியாண்டிற்கான Country-by-Country (CbC) அறிக்கையை (Form 3CEAD) மார்ச் 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மதிப்பீட்டு ஆண்டு 2021-22-க்கான 'Updated Return' தாக்கல் செய்ய இதுவே கடைசி வாய்ப்பாகும். இதற்குப் பிறகு அந்த ஆண்டிற்கான கணக்கைத் தாக்கல் செய்ய முடியாது. படிவம் 67 (Foreign Tax Credit): வெளிநாட்டில் ஈட்டிய வருமானத்திற்கு வரி செலுத்தியவர்கள், அதற்கான வரிச் சலுகையைப் பெற Form 67யை மார்ச் 31க்குள் பதிவேற்ற வேண்டும். மார்ச் மாத இறுதியில் இணையதளம் மற்றும் வங்கிகளில் நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், காலக்கெடுவுக்கு சில நாட்களுக்கு முன்னரே பணிகளை முடிப்பது நல்லது.