LOADING...
புதிய வருமான வரி சட்டம் 2025: டிஜிட்டல் சோதனைகள் குறித்து பிரிவு 247 கூறுவது என்ன?
புதிய வருமான வரி சட்டத்தில் டிஜிட்டல் சோதனைகள் குறித்தான பிரிவு 247 இன் முக்கியத்துவம்

புதிய வருமான வரி சட்டம் 2025: டிஜிட்டல் சோதனைகள் குறித்து பிரிவு 247 கூறுவது என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Feb 19, 2026
07:02 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு 64 ஆண்டுகள் பழமையான 1961 ஆம் ஆண்டின் வருமான வரி சட்டத்திற்குப் பதிலாக, வருமான வரிச் சட்டம் 2025 என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதில் உள்ள பிரிவு 247, டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்க அதிகாரிகளுக்குப் கூடுதல் தெளிவான அதிகாரங்களை வழங்குகிறது. பழைய சட்டத்தில் இல்லாத ஒரு முக்கிய அம்சமாக, இதில் டிஜிட்டல் தளம் என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, சோதனையின் போது வரி ஏய்ப்புத் தொடர்பாக சந்தேகம் இருந்தால், கணினி, மொபைல் போன் அல்லது மின்னணு சாதனங்களின் கடவுச்சொற்களை அல்லது அணுகல் குறியீடுகளைத் தகர்க்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு.

ஒத்துழைப்பு

தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்க வேண்டியது கட்டாயம்

மின்னஞ்சல் சர்வர்கள், சமூக வலைதளக் கணக்குகள், கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் டிஜிட்டல் வாலட்களைச் சோதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சோதனைக்கு உள்ளாகும் நபர், அதிகாரிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்க வேண்டியது கட்டாயமாகும். சமூக வலைதளங்களில், வருமான வரித்துறை ஏஐ மூலம் அனைவரது மெயில்களையும் படிக்கும் என்ற செய்தி பரவி வருகிறது. ஆனால், இது குறித்து நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

விளக்கம்

நிதி அமைச்சகத்தின் விளக்கம்

பிரிவு 247 இல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்து எந்த நேரடித் தகவலும் இல்லை. இந்த அதிகாரம் சாதாரண வரி செலுத்துவோருக்குப் பொருந்தாது. மிகப்பெரிய வரி ஏய்ப்பு அல்லது கணக்கில் வராத சொத்துக்கள் பற்றிய நம்பகமான தகவல் இருந்தால் மட்டுமே இத்தகைய சோதனைகள் நடத்தப்படும். இது அனைவரது தனிப்பட்ட மெயில்களையும் படிக்கும் உளவு வேலை அல்ல. முறையான அனுமதி பெற்ற சர்வே மற்றும் சோதனை காலங்களில் மட்டுமே இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும்.

Advertisement

வரி ஏய்ப்பு

வரி ஏய்ப்புத் தடுப்பு மற்றும் தனியுரிமை

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் சூழலில், கிரிப்டோகரன்சி மற்றும் ஆன்லைன் பணப்பரிமாற்றங்களை மறைப்பதைக் தடுக்கவே இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், தனிநபரின் தனியுரிமை பாதிக்கப்படாமல் இருக்க, உயர்மட்ட அதிகாரிகளின் அனுமதிக்குப் பிறகே இத்தகைய சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்ற பாதுகாப்பு விதிகளும் இதில் உள்ளன.

Advertisement