நவம்பர் 2, 3 தேதிகளில் IDBI வங்கி வேலைநிறுத்தம்: ஏடிஎம் & டிஜிட்டல் சேவைகள் நிலவரம் என்ன?
செய்தி முன்னோட்டம்
ஐடிபிஐ வங்கியின் ஊழியர் சங்கங்கள் வரும் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தலைமை நிர்வாகத்திற்கு முறைப்படி நோட்டீஸ் அளித்துள்ளன. இதனையடுத்து, வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களின் முக்கியமான கிளை சார்ந்த பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு ஐடிபிஐ வங்கி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ளது. ஊழியர்களின் பங்கேற்பைப் பொறுத்து, இந்த வேலைநிறுத்த நாட்களில் வங்கி நிர்வாகத்தின் நேரடிக் கிளை செயல்பாடுகள் மற்றும் ஆவணச் சமர்ப்பித்தல் போன்ற சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சேவைகளில் பாதிப்பு
கிளைச் சேவைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
நேரில் கிளைகளுக்கு சென்று கணக்கு தொடர்பான உதவிகளை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், சிரமங்களைத் தவிர்க்க உடனடியாக பணிகளை முடிக்குமாறு வங்கி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
"நவம்பர் 2-3 தேதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக, முக்கியமான வங்கிப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுங்கள்" என IDBI வங்கி தனது X தளத்தில் தெரிவித்துள்ளது
சேவைகள்
டிஜிட்டல் சேவைகள் மற்றும் இலவச ஏடிஎம் பயன்பாடு
வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், வாடிக்கையாளர்களுக்குப் பெரும் நிவாரணமாக வங்கியின் டிஜிட்டல் சேவைகள் தடையின்றி இயங்கும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஐடிபிஐ வங்கியின் 'Go Mobile+' செயலி, நெட் பேங்கிங் மற்றும் யுபிஐ சேவைகள் வழக்கம் போல் முழுமையாக செயல்படும்.
கிளைகள் தவிர்த்த வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் ஐடிபிஐ ஏடிஎம்கள் இயங்கும்.
வேலைநிறுத்த நாட்களான நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில், ஐடிபிஐ அல்லாத பிற வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவசரப் பணத்தேவை இருக்கும் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணத்தை எடுத்துக் கொள்ளவும், ஏடிஎம் மற்றும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.