இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவிற்கு தயாராகும் ஹூண்டாய்; அடுத்த வாரம் வெளியிட திட்டம்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ஐபிஓ சந்தாக்களுக்காக அடுத்த வாரம் திறக்கப்பட உள்ளது. இந்த ஐபிஓவில் ஒரு பங்கின் விலை ரூ. 1,865 முதல் 1,960 ($22 முதல் $23) வரை இருக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் செவ்வாயன்று (அக்டோபர் 8) தெரிவித்தன. இதன் மூலம், இந்த ஆண்டு நாட்டின் மிகப்பெரிய பங்கு வழங்கலை வெளியிடும் ஹூண்டாய் இந்த ஐபிஓவின் மொத்த மதிப்பு $19 பில்லியன் வரை இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய், வெளிநாட்டில் மேற்கொள்ளும் முதல் பங்குச் சந்தைப் பட்டியலானது இந்திய ஐபிஓவாகும். இந்தியாவில், 2003இல் மாருதி சுசுகிக்குப் பிறகு இரண்டு தசாப்தங்களில் பங்கு விற்பனைக்கு வரும் முதல் கார் உற்பத்தி நிறுவனமாகவும் இது உள்ளது.
அக்டோபர் 14 அன்று ஐபிஓ வெளியீடு
$3 பில்லியன் ஐபிஓ பெரிய நிறுவன முதலீட்டாளர்களுக்கான சந்தாக்களுக்காக அக்டோபர் 14 அன்று திறக்கப்படும். மேலும் அக்டோபர் 15-17இல் சில்லறை மற்றும் பிற வகைகளுக்கான சந்தாக்களுக்கு ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இறுதியில், நிறுவனத்தின் ஐபிஓ தோராயமாக $19 பில்லியன் மதிப்புடையதாக இருக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பங்கு அக்டோபர் 22 அன்று மும்பையில் வர்த்தகத்தைத் தொடங்க உள்ளது. ஹூண்டாய் மாருதிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய வாகன உற்பத்தியாளர் ஆகும். மேலும் அதன் எஸ்யூவி வரிசையை விரிவுபடுத்துவதன் மூலம் உள்நாட்டு போட்டியாளர்களிடமிருந்து சந்தைப் பங்கை மீட்டெடுக்க விரும்புகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.