விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டவர்கள் வங்கிகளில் மோசடி செய்தது எத்தனை கோடி? ED வசூலித்தது எவ்வளவு?
செய்தி முன்னோட்டம்
தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள், இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.58,082 கோடிக்கு மேல் கடன்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் திங்கள்கிழமை மக்களவையில் தெரிவித்தது. இந்த தொகையில் அக்டோபர் 31, 2025 நிலவரப்படி அசல் தொகையாக ரூ.26,645 கோடியும், திரட்டப்பட்ட வட்டியாக ரூ.31,437 கோடியும் அடங்கும். இந்தத் தொகை விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடி உட்பட மொத்தம் 15 நபர்களால் செலுத்தபட வேண்டியது. இவர்கள் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், 2018-இன் கீழ் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் (FEO) என அறிவிக்கப்பட்டுள்ளனர். விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோரின் வழக்குகளில், அமலாக்கத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து ₹18,000 கோடிக்கும் அதிகமான தொகையை மீட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் தெரிவித்துள்ளது.
மீட்பு
கடன் மோசடி மற்றும் மீட்பு விவரங்கள்
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனர் விஜய் மல்லையா, வைர வியாபாரி நிரவ் மோடி, மற்றும் அவரது மாமா மெஹுல் சோக்ஸி ஆகிய மூவரின் நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு ஏற்படுத்திய மொத்த இழப்பு சுமார் ₹22,585 கோடி ஆகும். இந்த வழக்குகளில், அமலாக்கத் துறை மூவருக்கும் சொந்தமான சுமார் ₹19,111 கோடி மதிப்புள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சொத்துகளை முடக்கியது. இது, வங்கிகளுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பில் 84 சதவிகிதமாகும். இதில் ₹9,371 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முதற்கட்டமாக வங்கிகள் மற்றும் மத்திய அரசுக்கு வழங்கியது. அடுத்தடுத்த கட்டங்களில், மார்ச் 2022 நிலவரப்படி, சுமார் ₹15,114 கோடி மதிப்புள்ள சொத்துகள் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.