ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் கோபிசந்த் பி. ஹிந்துஜா லண்டனில் காலமானார்
செய்தி முன்னோட்டம்
உலக புகழ்பெற்ற தொழில்துறை நிறுவனமான ஹிந்துஜா குழுமத்தின் (Hinduja Group) தலைவர் கோபிசந்த் பி. ஹிந்துஜா லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார் என்று PTI செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கோபிசந்த் ஹிந்துஜா தனது மூத்த சகோதரர் எஸ்.பி. ஹிந்துஜா (S.P. Hinduja) மறைவுக்கு பிறகு, ஹிந்துஜா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார். உலகளாவிய வணிக வட்டாரங்களில் "GP" என்று அன்பாக அழைக்கப்படும் இந்துஜா, பல வாரங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், லண்டன் மருத்துவமனையில் காலமானதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு மனைவி சுனிதா, மகன்கள் சஞ்சய் மற்றும் தீரஜ் மற்றும் மகள் ரீட்டா ஆகியோர் உள்ளனர். கோபிசந்த் ஹிந்துஜா மற்றும் அவரது குடும்பத்தினர் உலகின் பணக்காரர்களில் ஒருவராக கருதப்படுகின்றனர்.
விவரங்கள்
ஹிந்துஜா குழுமம் பற்றி
ஹிந்துஜா குழுமம் 1919ஆம் ஆண்டு பர்மானந்த் தீப்சந்த் இந்துஜாவால் நிறுவப்பட்டது, அவர் சிந்துவிலிருந்து ஈரானுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் வணிகத்தின் அடித்தளத்தை நிறுவினார். பின்னர் குடும்பம் 1979ஆம் ஆண்டு ஈரானில் இருந்து லண்டனுக்கு தனது தளத்தை மாற்றியது. அதன் உலகளாவிய விரிவாக்கத்திற்கு களம் அமைத்தது. இன்று, மும்பையை தலைமையிடமாக கொண்ட குழுமம் உலகளவில் சுமார் 200,000 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது மற்றும் ஒரு டஜன் தொழில்களில் செயல்படுகிறது. இக்குழுமம் வாகனத் தயாரிப்பு, நிதி, எரிசக்தி, தொழில்நுட்பம், சுகாதாரம், ரியல் எஸ்டேட் மற்றும் ஊடகம் உட்பட பல்வேறு துறைகளில் செயல்படும் ஒரு உலகளாவிய சாம்ராஜ்யமாகும். அசோக் லேலண்ட் (Ashok Leyland) மற்றும் இன்டஸ்இண்ட் வங்கி(IndusInd Bank) ஆகியவை இந்தியாவில் இக்குழுமத்தின் முக்கிய நிறுவனங்களில் அடங்கும்.