உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது விண்டுஃபால் வரிவிதித்த மத்திய அரசு
இரண்டு மாதங்களுக்குப் பிறகு கச்சா எண்ணெய் மீது மீண்டும் விண்டுஃபால் வரி (Windfall Tax) விதித்திருக்கிறது மத்திய அரசு. கடந்த மே மாதத்திற்கு முன்பு வரை கச்சா எண்ணெய் மீது டண்ணுக்கு ரூ.4,100-ஐ விண்டுஃபால் வரியாக விதித்திருந்தது மத்திய அரசு. கடந்த மே மாதம் அந்த விண்டுஃபால் வரியை நீக்கிய நிலையில், தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது டண்ணுக்கு ரூ.1,600-ஐ விண்டுஃபால் வரியாக விதித்திருக்கிறது மத்திய அரசு. எனினும், இந்த வரியானது கச்சா எண்ணெய் மீது மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் ஏவியேஷன் டர்பைன் உள்ளிட்ட கச்சா எண்ணெய்யில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மீது விண்டுஃபால் வரி எதுவும் விதிக்கப்படவில்லை.
விண்டுஃபால் வரி என்றால் என்ன?
சர்வதேச சந்தையில் ஏற்படும் எதிர்பாராத மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகளால், திடீரென வணிக நிறுவனங்களுக்குக் கிடைக்கும் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரியே விண்டுஃபால் வரி எனக் குறிப்பிடப்படுகிறது. சிறப்பு கூடுதல் கலால் வரி என்ற பெயரில் வணிக நிறுவனங்கள் மீது இந்த வரி விதிக்கப்படும். கச்சா எண்ணெய்யைப் பொறுத்தவரை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கச்சா எண்ணெய்யின் சராசரி விலை மாறுபாட்டை முன்னிட்டு இந்த விண்டுஃபால் வரி விதிக்கப்படுகிறது. சவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்து, சர்வதேச அளவில் அதன் விலை உயர்ந்து வருகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் பேரலுக்கு 6 டாலர்கள் வரை கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்திருக்கும் நிலையில், இந்த விண்டுஃபால் வரி விதிக்கப்பட்டிருக்கிறது.