ஒரே நாளில் ₹41 லட்சம் கோடி காலி; ஏஐ தேடலால் கூகுளுக்கு மிகப்பெரும் இழப்பு; அச்சத்தில் முதலீட்டாளர்கள்
செய்தி முன்னோட்டம்
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட், தனது காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் அதன் மதிப்பு ஒரே நாளில் $500 பில்லியன் (சுமார் ₹41 லட்சம் கோடி) சரிந்தது. கூகுள் தேடுபொறியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு சுருக்க குறிப்பு அம்சம் நிறுவனத்தின் முதன்மை விளம்பர வருவாயைப் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டு, ஆல்பபெட் நிறுவனத்தின் பங்குகள் 13 சதவீதம் வரை கடுமையான சரிவை சந்தித்தன.
ஏஐ செலவினங்கள்
அதிகரிக்கும் ஏஐ செலவினங்கள் மற்றும் குறைந்த பயன்பாட்டு லாபங்கள்
கூகுள் கிளவுட் பிரிவின் வருவாய் 103 சதவீதம் அதிகரித்து $31 பில்லியனை எட்டிய போதிலும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் 25 சதவீதம் வரை சரிந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிலவும் கடும் போட்டியை எதிர்கொள்ள பில்லியன் கணக்கிலான டாலர்களை ஆல்பபெட் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.
இதனால் நிறுவனத்தின் ரொக்க பணப் புழக்கம் மைனஸ் $9 பில்லியனாகக் குறைந்துள்ளது.
அதாவது நிறுவனம் ஈட்டும் வருவாயை விட ஏஐ தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக அதிக தொகையைச் செலவிட்டு வருவது உறுதியாகியுள்ளது.
அமேசான் முதலீடு
அமேசான் நிறுவனத்தின் முதலீடுகளும் முதலீட்டாளர்களின் கவலையும்
கூகுளைத் தொடர்ந்து அமேசான் நிறுவனமும் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில், அதன் பங்குகளும் 6 சதவீதம் சரிவை சந்தித்தன.
அமேசானின் விற்பனை 11 சதவீதம் உயர்ந்து $201 பில்லியனை எட்டிய போதிலும், அதன் ரொக்கப் புழக்கம் மைனஸ் $42 பில்லியனாக சரிந்தது.
சொந்தமாக ஏஐ சிப்களைத் தயாரிப்பது மற்றும் பெட்ராக் தளம் போன்ற எதிர்கால திட்டங்களுக்காக அமேசான் அதிகளவு நிதியை செலவிட்டு வருகிறது.
இருப்பினும் இந்த முதலீடுகள் உடனடியாக லாபத்தை தருமா என்பதில் முதலீட்டாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
எதிர்காலம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிலை மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் எதிர்காலம்
மற்றொரு தொழில்நுட்ப ராட்சதனான மைக்ரோசாஃப்ட் தனது செலவினங்களைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
அதன் காலாண்டு வருவாய் 19 சதவீதம் உயர்ந்து $92.3 பில்லியனாக அதிகரித்துள்ளதுடன், கிளவுட் வணிகமும் 30 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
இருப்பினும், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ வளர்ச்சிக்காக செலவிடும் தொகைகள் எப்போது உண்மையான லாபமாக மாறும் என்ற கேள்வி வால்ஸ்ட்ரீட் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதன் காரணமாக முன்னணி டெக் நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன.