தங்கம் வாங்குவோருக்கு அலர்ட்! அமெரிக்கா-ஈரான் போரால் மாறப்போகும் தங்கம், வெள்ளி விலை; நிபுணர்களின் முக்கிய கணிப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர நடத்தப்படும் அமைதிப் பேச்சுவார்த்தை முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் தங்கம் வெள்ளி விலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நீடிக்க வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். உலகளாவிய அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தரவுகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் ஆகியவை அடுத்த வாரப் புல்லியன் சந்தையைத் தீர்மானிக்கவுள்ளன.
சந்தை நிலவரம்
சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சந்தையில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சர்வதேசச் சந்தையான கோமெக்ஸ் வர்த்தகத்தில், கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை 1 சதவீதம் சரிந்து ஒரு அவுன்ஸ் 4,523.2 டாலராக நிலைபெற்றது. அதேபோல், வெள்ளியின் விலையும் சர்வதேசச் சந்தையில் சுமார் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்து ஒரு அவுன்ஸ் 76.20 டாலராகக் குறைந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது. ஆனால் இந்திய உள்நாட்டுச் சந்தையான எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில், தங்கம் 10 கிராமுக்கு 0.40 சதவீதம் சற்று உயர்ந்து 1,58,670 ரூபாய் என்ற அளவில் முடிவடைந்தது; வெள்ளி ஒரு கிலோ 2.71 லட்சம் ரூபாயாகக் குறைந்தது.
முதலீட்டாளர்கள் தயக்கம்
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரானின் முரண்பட்ட கருத்துக்களால் முதலீட்டாளர்கள் தயக்கம்
வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணித்து, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை எட்டப்படும் நிலையில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒப்பந்தத்தின் பெரும்பாலான பகுதிகள் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும், இறுதி விவரங்கள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் ட்ரம்ப் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியின் முழுக் கட்டுப்பாடு ஈரான் வசம் மட்டுமே இருக்கும் எனக் கூறி, டிரம்பின் இந்த வாதத்தை ஈரான் நாட்டு ஊடகங்கள் உடனடியாக மறுத்துள்ளன. இரு நாடுகளின் இந்த முரண்பட்ட கருத்துக்களால் சந்தையில் தெளிவான போக்கு இல்லாததால், முதலீட்டாளர்கள் தற்போது தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யச் சற்றுத் தயக்கம் காட்டி வருகின்றனர்.
ரூபாய் மதிப்பு
இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வால் தங்கம் விலையில் கட்டுப்பா
சர்வதேசச் சந்தையில் கடந்த வாரம் கச்சா எண்ணெயின் விலையில் அதிரடியாக 7 சதவீதம் வரை லாபப் பதிவு (Profit Booking) நடந்ததால், உலகளாவிய பணவீக்கக் கவலை சற்று குறைந்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 97 என்ற பலவீனமான நிலையில் இருந்து மீண்டு 95.70 என்ற அளவிற்கு வலுவடைந்துள்ளது. இந்திய ரூபாயின் இந்த அதிரடி முன்னேற்றம் காரணமாகவே, சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை நிலையாக இருந்தபோதிலும் உள்நாட்டில் அதன் விலை பெரிய அளவில் உயர முடியாமல் கட்டுப்படுத்தப்பட்டது.
முக்கியத் தரவுகள்
அமெரிக்காவின் புதிய ஃபெடரல் வங்கித் தலைவர் மற்றும் முக்கியத் தரவுகள்
அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் தலைவராக இருந்த ஜெரோம் பவல்லின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய தலைவராகக் கெவின் வார்ஷ் பொறுப்பேற்றுள்ளார். உலகளாவிய அரசியல் போர்கள் மற்றும் பணவீக்கக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அவர் பொறுப்பேற்றுள்ளதால், வட்டி விகிதங்கள் குறித்து அவர் வெளியிடப்போகும் அறிவிப்புகளைச் சந்தை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இது தவிர, அடுத்த வாரம் வெளியாகவுள்ள அமெரிக்காவின் ஜிடிபி எண்கள், நுகர்வோர் நம்பிக்கை குறியீடு மற்றும் பிசிஇ பணவீக்கத் தரவுகளும் தங்கம் விலை மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமையப் போகிறது. மேலும், வரும் வியாழக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியப் பங்குச் சந்தையின் காலை நேர வர்த்தகம் விடுமுறை என்பதால் அன்றைய தினம் தங்கம் வர்த்தகத்தில் சுணக்கம் ஏற்படலாம்.