ஆந்திராவைத் தொடர்ந்து தெலுங்கானா; ₹2,500 கோடியில் 48 MW தரவு மையத்தை அமைக்கிறது அதானி குழுமம்
செய்தி முன்னோட்டம்
தொழிலதிபர் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், தெலுங்கானாவில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பசுமைத் தரவு மையத்தை (Green Data Centre) அமைக்க உள்ளது. இந்த 48 மெகாவாட் திறன் கொண்ட திட்டத்திற்காக ₹2,500 கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாக, அதானி துறைமுகங்கள் மற்றும் SEZ லிமிடெட் நிர்வாக இயக்குநர் கரன் அதானி திங்களன்று (டிசம்பர் 8) அறிவித்தார். தெலுங்கானா ரைஸிங் குளோபல் சப்மிட்டின் தொடக்க அமர்வில் பேசிய கரன் அதானி, "இந்த மையம் அதிநவீன ஏஐ, கிளவுட் தொழில்நுட்பம் மற்றும் அதிதிறன் கணினி ஆகியவற்றில் முன்னணியில் இருக்கும். மேலும் வேகமாக டிஜிட்டல் மயமாகி வரும் இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றும்." என்று கூறினார்.
தெலுங்கானா
தெலுங்கானாவில் அதானியின் முதலீடுகள்
அதானி குழுமம் கடந்த மூன்று ஆண்டுகளில், சாலைகள் அமைப்பது மற்றும் தளவாட வசதிகளை மேம்படுத்துவது உட்பட, தெலுங்கானாவின் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் துறைகளில் இதுவரை சுமார் ₹10,000 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் 7,000க்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அதானி குழுமம், ஆத்மநிர்பர் பாரத் இலக்கின் ஒரு பகுதியாக, ஹைதராபாத்தில் ஒரு முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளிப் பூங்காவை அமைத்துள்ளது. இது ஆளில்லா விமானகளைத் தயாரித்து இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கும் உலகச் சந்தைக்கும் வழங்கி வருகிறது. இந்தத் தரவு மையத் திட்டம், மாநிலத்தின் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பப் பயணத்தில் ஒரு முக்கியப் படியாகும்.