சென்னை-பெங்களூர் இடையே புல்லட் ரயில் சேவை துவங்க திட்டம்
புல்லட் ரயில்கள் என்றால் அது ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளை தான் நினைவுப்படுத்தும். இந்தியாவில் இந்த புல்லட் ரயில் சேவை துவங்க வேண்டும் என்பது நெடுநாள் கனவாக இருந்துவந்த நிலையில் தற்போது மும்பை-அகமதாபாத் வழித்தடம் இடையே 508கி.மீ.,தூர பயணத்திற்கான அடித்தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே ஜப்பான் அளித்துள்ள நிதி உதவி மூலம் இந்த திட்டத்திற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. அதன்படி 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த புல்லட் ரயில் சேவை துவங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்த பின்னர் மணிக்கு 320கி.மீ.வேகத்திற்கு பயணிக்கலாம் என்று தெரிகிறது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இது என்னும் பெருமையினை மும்பை-அகமதாபாத் வழித்தடம் பெற்றுள்ளது.
புல்லட் ரயில் சேவை வரும் 2051ம்ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் வகையில் திட்டம்
இதனைத்தொடர்ந்து இந்தியாவின் மற்றப்பகுதிகளிலும் இந்த ரயில்ச்சேவையினை கொண்டுவர மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்களின் வேகங்களை அதிகப்படுத்தும் பணியில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து, தேசிய ரயில் திட்டத்தின்கீழ், வேறுசில புது வழித்தடங்களிலும் புல்லட் ரயில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். அதனையடுத்து, மும்பை-நாக்பூர், மும்பை-ஹைதராபாத், சென்னை-மைசூரு, டெல்லி-அமிர்தசரஸ், டெல்லி-வாரணாசி, டெல்லி-அகமதாபாத், வாரணாசி-ஹவுரா உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளது என்று தெரிகிறது. தற்போது சென்னை-மைசூரு இயங்கிவரும் வந்தே பாரத் பெங்களூர் வழியே செல்லும்பட்சத்தில், புல்லட் ரயிலும் அதேபோல் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த புல்லட் ரயில்சேவை வரும் 2051ம்ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் வகையில் திட்டமிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.