இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஜாக்பாட்! 2035-க்குள் $140 பில்லியன் சேர்க்கும் வர்த்தக ஒப்பந்தங்கள்! புளூம்பெர்க் கணிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் ஏற்கனவே அமலில் உள்ள மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் கையெழுத்தாகவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் 2035 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுமார் $140 பில்லியன் (சுமார் ₹11.6 லட்சம் கோடி) கூடுதலாக சேரும் என புளூம்பெர்க் எகனாமிக்ஸ் அறிக்கை கணித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார உற்பத்தி 1.7 சதவீதமும், ஏற்றுமதி அளவு 6.2 சதவீதமும் உயரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 'சிலிக்கான், ஸ்டீல் அண்ட் ஸ்டேட்கிராஃப்ட்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அக்டோபர் 2026-இல் வெளிவந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நியூசிலாந்துடனான ஒப்பந்தங்கள் 2027 முதல் அமலுக்கு வரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
வளர்ச்சி
கூடுதல் ஒப்பந்தங்கள் மூலம் $170 பில்லியன் வளர்ச்சி சாத்தியம்
அறிக்கையின்படி, தற்போதுள்ள ஒப்பந்தங்கள் மட்டுமே இந்தியாவின் ஜிடிபியை 1.2 சதவீதமும், ஏற்றுமதியை 4 சதவீதமும் உயர்த்தும் திறன் கொண்டவையாகும்.
இதனுடன் அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மற்றும் ஈரேசிய பொருளாதார ஒன்றியம், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்தால், ஜிடிபி உயர்வு 2.1 சதவீதமாக ($170 பில்லியன்) அதிகரிக்கும்.
மேலும் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அளவு 9.2 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் கணிப்புக தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையில் இந்தியாவின் வர்த்தக ஆதிக்கம் இதனால் மேலும் வலுவடையும்.
உலக வர்த்தக அமைப்பு
அமெரிக்க வரிக் கொள்கையும் உலக வர்த்தக அமைப்பின் மாதிரியும்
உலக வர்த்தக அமைப்பின் உலகளாவிய சமநிலை மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா இந்தியப் பொருட்கள் மீதான வரிகளை 2024-இல் இருந்த 2.4% என்பதிலிருந்து ஆகஸ்ட் 2026-இல் 11.6% ஆக உயர்த்தியுள்ளது.
இதனால் அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதி ஐந்தில் ஒரு பங்கு குறையக்கூடும்.
இருப்பினும், இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 2% மட்டுமே அமெரிக்க சந்தையை சார்ந்துள்ளதால், பிற நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் இந்த இழப்பை ஈடுசெய்து நாட்டின் ஜிடிபியைப் பாதுகாக்கும்.
சீர்திருத்தங்கள்
உள்நாட்டு சீர்திருத்தங்கள் மற்றும் உற்பத்தித் துறை மாற்றம்
வர்த்தக ஒப்பந்தங்களைத் தாண்டி உள்நாட்டு உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம் இந்தியா கூடுதல் பலன்களைப் பெற முடியும்.
உற்பத்திக்கான செலவை 2% குறைப்பதன் மூலம் ஜிடிபியில் மேலும் 0.5% வளர்ச்சியையும், ஏற்றுமதியில் 1% வளர்ச்சியையும் அடைந்துவிட முடியும்.
தற்போது 40%-க்கும் அதிகமான தொழிலாளர்கள் விவசாயத் துறையிலேயே உள்ளனர்.
படிப்படியாக அவர்களை உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கு மாற்றுவதன் மூலம் ஜிடிபியில் கூடுதலாக 2% வளர்ச்சியைக் கொண்டுவர முடியும் என அறிக்கை பரிந்துரைக்கிறது.