தமிழகத்தில் ரூ.1,600 கோடி மதிப்பில் உருவாகும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது
ஃபாக்ஸ்கான் குழும நிறுவனங்களுள் ஒன்றான ஃபாக்ஸ்கான் இன்டஸ்ட்ரியல் இன்டர்னெட் நிறுவனம் (FII) மற்றும் தமிழக அரசிடையே, புதிய மின்னணு தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியிருக்கிறது. ஃபாக்ஸ்கானின் ஆப்பிள் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று ஏற்கனவே சென்னையில் இயங்கி வரும் நிலையில், சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரத்தில் புதிய மின்னணு தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது FII. இந்த புதிய தொழில்சாலையானது சென்னை ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலிருந்து தனித்து இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் செமிகண்டக்டர் மாநாட்டுக்காக இந்தியா வந்திருக்கும் ஃபாக்ஸ்கான் குழுமத் தலைவர் யங் லியு மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.
காஞ்சிபுரத்தில் உருவாகும் புதிய ஃபாஸ்கான் குழும நிறுவன தொழிற்சாலை:
இந்த புதிய தொழிற்சாலையானது சுமார் ரூ.1,600 கோடி மதிப்பில் உருவாக்கப்படவிருக்கிறது. இந்தப் புதிய தொழிற்சாலை மூலம் 6,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவித்திருக்கிறது தமிழக அரசு. ஃபாக்ஸ்கான் குழும நிறுவனமான FII நிறுவனமானது, மின்னணு சாதன தயாரிப்பு, கிளவுடு சேவை உபகரணத் தயாரிப்பு மற்றும் தொழிற்சாலை எந்திரங்களைத் தயாரித்து வருகிறது. புதிதாக கட்டமைக்கப்படவிருக்கும் இந்த தொழிற்சாலையில் என்ன தயாரிப்பை அந்நிறுவனம் மேற்கொள்ளவிருக்கிறது என்பது தொடர்பான விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இதன் கட்டமைப்பை 2024-ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. "தமிழகத்தை ஆசியாவின் வளர்ந்து வரும் மின்னணு சாதன தயாரிப்பு மையமாக மாற்றும் லட்சியத்தில் அடுத்த மைல்கல் இந்த ஒப்பந்தம்." என இந்த ஒப்பந்தம் குறித்து ட்வீட் செய்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.