ஆண்டுக்கு ரூ.9.6 லட்சம் சராசரி சம்பளம் பெறும் இந்தியர்கள்
இந்திய சம்பளதாரர்களின் சராசரி சம்பளம் குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது பிரபல ஆங்கில பத்திரிகையான ஃபோர்ப்ஸ். அத்தளம் குறிப்பிட்டிருக்கும் தரவுகளின் படி, இந்தியர்கள் சராசரியாக ரூ.9.65 லட்சம் வருவாய் ஈட்டுவதாகக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த சராசரி வருவாய் கணக்கீடானது கிளாஸ்டோரை தளத்தில் குறிப்பிட்டிருப்பதை அடிப்படையாக வைத்துக் குறிப்பிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது ஃபோர்ப்ஸ். இந்தியாவில் ஆண்களின் சராசரி ஆண்டு வருவாய் ரூ.19.53 லட்சமாகவும், பெண்களின் ஆண்டு வருவாய் ரூ.15.16 லட்சமாக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சராசரி ஆண்டு வருவாய் தவிர்த்து, ஒவ்வொரு மாநிலத்தின் சராசரி மாத வருமானம் குறித்த தகவல்களையும் அளித்திருக்கிறது அத்தளம்.
7வது இடத்தில் தமிழகம்:
இந்தியாவில் ரூ.20,730 சராசரி மாத சம்பளத்துடன் முதலிடத்தில் உள்ளது உத்திர பிரதேசம். அதனைத் தொடர்ந்து ரூ.20,210 சராசரி மாத சம்ரளத்துடன் மேற்கு வங்கம் இரண்டாமிடத்திலும், ரூ.20,110 சராசரி மாத ஊதியத்துடன் மகராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்த சராசரி மாதம் ஊதியம் அதிகம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. இங்கே சராசரி மாத ஊதியமானது ரூ.19,600 ஆக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது ஃபோர்ப்ஸ். 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய இந்தப் பட்டியலில், ரூ.15,000-க்கும் குறைவான சராசரி மாத ஊதியத்துடன் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், டாமன் மற்றும் டையூ மற்றும் லச்சத் தீவுகள் கடைசி மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றன.