சமூக வலைதளமான எக்ஸை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து அதன் 71% மதிப்பை இழந்துள்ளது- அறிக்கை
சமூக வலைத்தள நிறுவனமான 'எக்ஸை'(முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எலான் மஸ்க் வாங்கியது முதல், தனது 71% மதிப்பை இழந்துள்ளதாக ஃபிடிலிட்டி செக்யூரிட்டிகள் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட$44 பில்லியன் மதிப்பில், ஒரு பகுதியை மட்டுமே தற்போது கொண்டுள்ளது. குறைந்த பயனர்களின் எண்ணிக்கை, விளம்பரச் சிக்கல்கள், உள்ளிட்டவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது. எக்ஸ் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பாக $12.5 பில்லியனாக கணித்துள்ள ஃபிடிலிட்டி, அந்நிறுவனத்தை மாஸ்க் கையகப்படுத்திய முதல் வருடத்தில் 15% மாதாந்திர பயனர்களின் குறைவை கண்டதாக தெரிவித்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை, எக்ஸ் என கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மஸ்க் பெயர் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஒரே மாதத்தில் 10.7% மதிப்பை இழந்த எக்ஸ்
எக்ஸ் நிறுவனத்தை மஸ்க் வாங்கிய உடனே, அதன் பணியாள்களில் குறைந்தது 50% பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதில் பதிவேற்றப்படும் உள்ளடக்கங்கள்(Content) மீதான மேற்பார்வையும் வெகுவாக குறைக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம், பெரிய சமூக வலைதள நிறுவனங்கள் மத்தியில் எக்ஸ் நிறுவனத்தில், அதிகப்படியான தவறான தகவல் பதிவுகள் வலம் வருவதை கண்டறிந்த ஐரோப்பிய ஒன்றியம், மஸ்க்கை இதுகுறித்து எச்சரித்து இருந்தது. ஃபிடிலிட்டி செக்யூரிட்டிகள் அறிக்கையில், கடந்த நவம்பர் மாதம் விளம்பரதாரர்கள் பெரும்பான்மையாக நிறுவனத்தை விட்டு வெளியேறியதை தொடர்ந்து, அந்த மாதம் மட்டும் அந்நிறுவனம் அதன் 10.7% மதிப்பை இழந்தது. மஸ்க் யூத எதிர்ப்பு பதவிக்கு ஆதரவளித்ததை தொடர்ந்து, டிஸ்னி, ஆப்பிள் மற்றும் கோகோ கோலா உள்ளிட்ட முக்கிய விளம்பரதாரர்கள், அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறினர்.