ஆண்டுக்கு ₹10 லட்சம் சம்பாதித்தும் சேமிப்பு இல்லையா? 90% பேர் செய்யும் இந்த 1 தவறை உடனே நிறுத்துங்கள்
செய்தி முன்னோட்டம்
இன்றைய காலகட்டத்தில் ஆண்டுக்கு ₹10 லட்சம் வரை நல்ல சம்பளம் வாங்கும் பலருக்கு மாத இறுதியில் வங்கிக் கணக்கில் பணமே மிஞ்சுவதில்லை. அதிக சம்பளம் கிடைத்தாலும் சேமிக்க முடியவில்லையே என்ற கவலை பெரும்பான்மையான ஊழியர்களுக்கு இருக்கிறது. இதற்குக் பணப் பற்றாக்குறை காரணமல்ல, மாறாக அவர்களின் தவறான நிதி நிர்வாகமே முக்கியக் காரணமாகும். முறையான திட்டமிடல் இல்லாததால் சம்பளம் எவ்வளவு உயர்ந்தாலும் செலவுகளும் அதற்கேற்ப அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதனால் சேமிப்பு என்பது எட்டாக்கனியாகவே மாறிவிடுகிறது.
தவறு
90% பேர் செய்யும் அந்த 1 மாபெரும் தவறு
அதிக சம்பளம் வாங்குபவர்களில் 90 சதவீதம் பேர் செய்யும் அந்த முதன்மைத் தவறு லைஃப்ஸ்டைல் பணவீக்கம் (Lifestyle Inflation) ஆகும்.
அதாவது வருமானம் அதிகரிக்கும் போது, அதற்கு ஏற்பத் தங்களின் வாழ்க்கைமுறை செலவுகளையும் தேவையற்ற முறையில் உயர்த்திக் கொள்வதாகும்.
சம்பளம் உயர்ந்தவுடன் ஆடம்பர பொருட்கள் வாங்குவது, அடிக்கடி உணவகங்களுக்கு செல்வது மற்றும் தேவையில்லாத தவணை முறைகளைப் பயன்படுத்துவது போன்றவை இதில் அடங்கும்.
வருமானம் கூடும் போது சேமிப்பை உயர்த்தாமல் செலவை உயர்த்துவதுதான் நிதிச் சிக்கலுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.
சேமிப்பு
வருமானம் வந்தவுடன் முதலில் சேமிப்பை ஒதுக்குங்கள்
பெரும்பாலோர் சம்பளம் வந்ததும் முதலில் செலவுகளை செய்துவிட்டு, இறுதியில் மிஞ்சும் பணத்தைச் சேமிக்க நினைக்கிறார்கள்.
இந்த அணுகுமுறையே முற்றிலும் தவறானதாகும்.
சம்பளம் கணக்கில் வரவு வைக்கப்பட்ட உடனே குறைந்தபட்சம் 20 முதல் 30 சதவீதப் பணத்தை முதலீடு அல்லது சேமிப்பிற்குப் பிரித்து வைத்துவிட வேண்டும்.
மீதமுள்ள பணத்தை மட்டுமே அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்கு பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும்.
'செலவு செய்தது போக மிச்சத்தை சேமிக்கக் கூடாது, சேமித்தது போக மிச்சத்தை செலவழிக்க வேண்டும்' என்பதே நிதியியலின் பொன்விதியாகும்.
தப்பிக்கும் வழிகள்
கிரெடிட் கார்டு மற்றும் கடன் சுழலில் இருந்து தப்பிக்கும் வழிகள்
கையில் பணம் இல்லாவிட்டாலும் கிரெடிட் கார்டு மற்றும் 'பை நவ் பே லேட்டர்' வசதிகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
அத்தியாவசியத் தேவைகளுக்கும் ஆடம்பர விருப்பங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
அவசர கால நிதி (Emergency Fund) ஒன்றை உருவாக்கி அதில் குறைந்தது 6 மாத செலவுகளுக்கான பணத்தை சேமித்து வைக்க வேண்டும்.
வரவு செலவுகளைத் தினமும் கணிப்பொறி அல்லது குறிப்பேட்டில் பதிவிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிறிய மாற்றங்கள் மூலமே எதிர்கால நிதிச் சுதந்திரத்தை உறுதி செய்ய முடியும்.