LOADING...
எடர்னல் லிமிடெட் (Zomato) குழுமத்தின் CEO தீபிந்தர் கோயல் பதவி விலகல்
Zomato நிறுவனரும், குழும CEO-வுமான தீபிந்தர் கோயல் பதவி விலகல்

எடர்னல் லிமிடெட் (Zomato) குழுமத்தின் CEO தீபிந்தர் கோயல் பதவி விலகல்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 21, 2026
04:36 pm

செய்தி முன்னோட்டம்

எடர்னல் லிமிடெட் (முன்னர் Zomato) நிறுவனத்தின் நிறுவனரும், குழும CEO-வுமான தீபிந்தர் கோயல், தனது பதவியிலிருந்து விலகுவதாக பங்குதாரர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக, பிளிங்கிட் (Blinkit) நிறுவனத்தின் CEO அல்பீந்தர் திண்ட்சா உடனடியாக அமலுக்கு வரும் வகையில் புதிய குழும சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார். தனது விலகல் குறித்து விளக்கமளித்துள்ள தீபிந்தர் கோயல், "சமீபகாலமாக அதிக ஆபத்து நிறைந்த புதிய தொழில்துறை சோதனைகளில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பொதுப் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் CEO-வாக இருந்துகொண்டு இத்தகைய பரிசோதனைகளில் ஈடுபடுவது சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் சரியானதல்ல. எனவே, எடர்னல் நிறுவனம் தனது தற்போதைய பாதையில் கவனச்சிதறல் இன்றி பயணிக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்," என்று கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பொறுப்பு

தீபிந்தர் அடுத்ததாக ஏற்கவுள்ள புதிய பொறுப்புகள்

தீபிந்தர் கோயல் சிஇஓ பதவியிலிருந்து விலகினாலும், அந்நிறுவனத்தின் துணைத் தலைவராக தொடர்ந்து நிர்வாகக் குழுவில் நீடிப்பார். நிறுவனத்தின் நீண்டகால யுக்திகள், கலாச்சாரம் மற்றும் ஒழுங்குமுறைகளில் அவர் தொடர்ந்து பங்களிப்பார். அதேநேரம், தினசரி வணிக முடிவுகள் மற்றும் செயல்பாடுகளைப் புதிய சிஇஓ அல்பீந்தர் திண்ட்சா கவனிப்பார். "பிளிங்கிட் நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து லாபகரமான பாதைக்குக் கொண்டு வந்த அல்பீந்தர், எடர்னல் குழுமத்தை வழிநடத்த முழுத் தகுதியுடையவர்" என்று தீபிந்தர் பாராட்டியுள்ளார். முக்கியமான ஒரு நடவடிக்கையாக, தனது கைவசம் இருந்த இன்னும் முதிராத (Unvested) பங்குகள் அனைத்தையும் (ESOPs) மீண்டும் நிறுவனத்தின் பொதுப் பங்குக் குழுமத்திற்கே தீபிந்தர் திரும்ப அளித்துள்ளார். இது அடுத்த தலைமுறை தலைவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement