விழுப்புரத்தில் தொழிற்சாலை; ரூ.400 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் டாபர் நிறுவனம் ஒப்பந்தம்
இந்தியாவின் மிகப்பெரிய வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் (எஃப்எம்சிஜி) நிறுவனங்களில் ஒன்றான டாபர், தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவ தமிழக அரசுடன் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் டாக்டர் டிஆர்பி ராஜா சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவு மூலம் இதை உறுதிப்படுத்தினார். தமிழ்நாடு மட்டுமல்லாது தென்னிந்தியாவிலேயே தனது முதல் தொழிற்சாலையாக இதை டாபர் அமைக்க உள்ள நிலையில், இதை வரவேற்ற அமைச்சர், இந்த ஆலையில் பதப்படுத்தப்படும் வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்கான புதிய வாய்ப்புகளை விவசாயிகளுக்கு கொடுக்கும் என்றார்.
டெல்டாகாரனாக மகிழ்ச்சி எனக் கூறிய டிஆர்பி ராஜா
தனது பதிவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்ட டிஆர்பி ராஜா, "எங்கள் முதல்வரும், டெல்டாகாரராக இருப்பதோடு, நானும் டெல்டா எம்எல்ஏவாக இருப்பதால், டெல்டா பகுதிக்கு சரியான முறையில் உணவு பதப்படுத்தும் தொழில்துறை இணைப்புகளை கொண்டு வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார். உணவு, கூந்தல் பராமரிப்பு, தோல் பராமரிப்பு, வீட்டுப் பராமரிப்பு, சப்ளிமெண்ட்ஸ் போன்ற பல்வேறு தயாரிப்புகளைக் கொண்ட டாபர், உண்மையான பழச்சாறுகள், மெஸ்வாக் மற்றும் பாபூல் பற்பசைகள், வாடிகா, ஆம்லா மற்றும் பாதாம் முடி எண்ணெய்கள், சியாவன்ப்ராஷ், ஓடோமோஸ், ஹோனிடஸ் இருமல் சிரப், குலாபரி மற்றும் பல பொருட்களை டாபர் தயாரிக்கிறது. 1884 ஆம் ஆண்டு எஸ்.கே.பர்மனால் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தில் பர்மன் குடும்பம் இன்னும் புரமோட்டர்களாக உள்ளது.