இனி ஒரு ஆப்பிலேயே பஸ், பிளைட், ட்ரெயின்! IRCTC உடன் கைகோர்த்த Cleartrip
செய்தி முன்னோட்டம்
ஃபிளிப்கார்ட் (Flipkart) நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல பயணச் சேவை தளமான Cleartrip, இந்திய இரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்துடன் (IRCTC) இணைந்து, தனது தளத்தில் இரயில் டிக்கெட் முன்பதிவு சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், விமானம் மற்றும் பேருந்து சேவைகளை தொடர்ந்து, தற்போது இரயில் பயணச் சந்தையிலும் கிளியர்டிரிப் தடம் பதித்துள்ளது. தற்போது செயலியில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இரயில் டிக்கெட் முன்பதிவு வசதி, விரைவில் கிளியர்டிரிப் இணையதளத்திலும் கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம் கணினி மற்றும் அலைபேசி என இரண்டிலும் பயனர்கள் தடையின்றிப் பயணங்களை முன்பதிவு செய்ய முடியும்.
சிறப்பம்சங்கள்
புதிய சேவையின் சிறப்பம்சங்கள்
இந்த ஒருங்கிணைப்பின் மூலம், கிளியர்டிரிப் செயலி வாயிலாகப் பயனர்கள் கீழ்க்கண்ட வசதிகளைப் பெறலாம். பொதுப் பிரிவு (General) மற்றும் தட்கல் என அனைத்து இரயில்வே ஒதுக்கீடுகளின் கீழும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இருக்கை இருப்பு, கட்டண விவரங்கள் மற்றும் PNR நிலையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். பெர்த் தேர்வு மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதிகள் ஒரே செயலியில் வழங்கப்பட்டுள்ளன. ஒரே தளத்தில் விமானம், ஹோட்டல், பேருந்து மற்றும் இரயில் பயணங்களை நிர்வகிக்க முடியும்.
காரணம்
ஏன் இந்த விரிவாக்கம்?
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 80 கோடிக்கும் அதிகமானோர் இரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர். இந்த மாபெரும் சந்தையை கருத்தில் கொண்டு, பயணிகளுக்கு எளிமையான மற்றும் வேகமான முன்பதிவு அனுபவத்தை வழங்க கிளியர்டிரிப் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. "இந்தியாவின் பயணத் தேவையில் இரயில்வே ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. IRCTC உடனான இந்த ஒப்பந்தம், எங்களது தளத்தை ஒரு முழுமையான பயணத் தீர்வாக மாற்றும்" என கிளியர்டிரிப் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வணிகப் பிரிவுத் தலைவர் மஞ்சரி சிங்கால் தெரிவித்துள்ளார்.