செபியின் புதிய விதிமுறைகளால் பங்குசந்தை ப்ரோக்கர்கள் அதிக கட்டணம் வசூலிக்க நேரிடும்: ஜீரோதா CEO
பங்குச் சந்தைகள், டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் மற்றும் க்ளியரிங் உறுப்பினர்களால் விதிக்கப்படும் கட்டணங்கள் வெளிப்படையாகவும் ஒரே மாதிரியாகவும் இருக்க வேண்டும் என்று இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்(செபி) நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இது குறித்து இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜீரோதா நிறுவனத்தின் CEO நிதின் காமத், "ஒன்று, ஜீரோ ப்ரோக்கரேஜ் என்ற கொள்கையை கைவிட வேண்டி இருக்கும் அல்லது பங்கு வர்த்தகங்களுக்கான ப்ரோக்கர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டி இருக்கும்." என்று கூறியுள்ளார். ஜீரோதா என்பது பங்கு வர்த்தகம் செய்ய உதவும் பிரபலமான ப்ரோக்கரேஜ் தளமாகும். ப்ரோக்கர் கட்டணம் உயர்த்தப்பட்டால் அது பங்கு சந்தை ப்ரோக்கர்கள், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களை கடுமையாக பாதிக்கும்.
ஜீரோதா நிறுவனத்தின் CEO நிதின் காமத் கூறியிருப்பதாவது:
பங்குச் சந்தைகள் போன்ற அனைத்து சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்களும் கட்டணம் வசூலிக்கும் விதத்தில் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று செபி கூறியுள்ளது. இந்த சுற்றறிக்கை பங்கு சந்தை ப்ரோக்கர்கள், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு வர்த்தகர் செய்யும் ஒட்டுமொத்த விற்றுமுதல் அடிப்படையில் பரிவர்த்தனை கட்டணங்களை பங்குச் சந்தை ப்ரோக்கர் நிறுவனங்கள் வசூலிக்கின்றன. ப்ரோக்கர்கள் வாடிக்கையாளரிடம் என்ன கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதற்கும், மாத இறுதியில் ப்ரோக்கர்களிடம் இருந்து பங்குசந்தை எவ்வளவு வசூலிக்கிறது என்பதற்கும் உள்ள வித்தியாசம் கடைசியில் ப்ரோக்கர்களுக்கே கிடைக்கும். இந்த தள்ளுபடிகள் எங்கள் வருவாயில் சுமார் 10% ஆகும். புதிய சுற்றறிக்கையால், இந்த வருமானம் போய்விடும். எனவே, வர்த்தகர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்க நேரிடும்.